Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சலவையகம் திறப்பு

Print PDF

தினமணி                 03.01.2014

ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சலவையகம் திறப்பு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் ரூ.15 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சலவையகத்தை அமைச்சர் பி.தங்கமணி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

நாமக்கல் நகரின் மையத்திலுள்ள மலைக்கோட்டை அடிவாரத்தில் கமலாய குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் பல ஆண்டுகளாக சலவைத் தொழிலாளிகள் துணிகளைத் துவைத்து சலவை செய்து வந்தனர். தற்போது புராதன நகரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை, சுற்றியுள்ள கமலாய குளம் உள்ளிட்ட பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, சலவை செய்வதற்கான இடமும் நகராட்சி 12ஆவது வார்டுக்கு உள்பட்ட கொசவம்பட்டி பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்தப் பகுதியில் ரூ.15 லட்சத்தில் சலவை அமைக்கப்பட்டுள்ளது. துணிகள் துவைப்பதற்கென 10 கல்கள், அதுடனேயே 10 நீர் தொட்டிகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ள இந்தச் சலவையகத்தையே தொழிலாளிகள் இனி துணி துவைக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலநாதன், வார்டு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

 

மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சத்தில் தார் சாலைப் பணி

Print PDF

தினமணி                 03.01.2014

மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சத்தில் தார் சாலைப் பணி

மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சம் மதிப்பிலான தார் சாலைப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

மொடக்குறிச்சி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் அவல்பூந்துறை சாலை முதல் நடுப்பாளையம், புதுக்காலனி, தெற்குமேடு, ஊஞ்சப்பாளையம் வழியாக முத்தூர் மெயின் ரோடு வரை நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.80 லட்சம் மற்றும் பொது நிதி ரூ.12 லட்சம் ஆக மொத்தம் ரூ.92 லட்சம் மதிப்பிலான 2.4 கி.மீ.க்கு புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தலைவர் தங்கவிலாஸ் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் மணி (எ) சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் துரைசாமி வரவேற்றார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.என். கிட்டுசாமி கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் குருமூர்த்தி, ஈரோடு ஆவின் இயக்குநர் அசோக், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவி, அதிமுக பேரூர் செயலாளர் மயில்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.தேவா நன்றி கூறினார்.

 

காஞ்சிபுரம் நகராட்சியில் 5,008 குழந்தைகள் பிறப்பு

Print PDF
தினமணி                 03.01.2014

காஞ்சிபுரம் நகராட்சியில் 5,008 குழந்தைகள் பிறப்பு


காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 5,008 குழந்தைகள் பிறந்துள்ளன.

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை, நகராட்சி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.

இங்கு காஞ்சிபுரம் நகராட்சி மக்களைத் தவிர காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றுப்பகுதி மக்கள், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக பிரசவத்துக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மட்டும் மாதத்துக்கு 300 முதல் 400 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 2,634 ஆண் குழந்தைகள், 2,374 பெண் குழந்தைகள் என மொத்தம் 5,008 குழந்தைகள் பிறந்துள்ளன.

2012-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சியில் 5,760 குழந்தைகள் பிறந்துள்ளன. 2011-ஆம் ஆண்டு 5,829 குழந்தைகளும், 2010-ஆம் ஆண்டு 5,170 குழந்தைகளும், 2009-ஆம் ஆண்டு 5,964 குழந்தைகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 


Page 216 of 3988