Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திட்ட அதிகாரிகளை மாநகராட்சி பணிக்கு அனுப்ப சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

Print PDF

தினமலர்              02.01.2014

திட்ட அதிகாரிகளை மாநகராட்சி பணிக்கு அனுப்ப சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

கட்டட அனுமதி பணிகளை, விரைவுபடுத்தும் நோக்கில், மூத்த மற்றும் துணை திட்ட அதிகாரிகளை, அயல்பணி அடிப்படையில், மாநகராட்சிக்கு அனுப்ப, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) ஒப்புதல் அளித்துள்ளது.

தனி துறை

நகரமைப்பு சட்டப்படி, மூன்று மாடிகள் வரையிலான, ஆறு வீடுகள் கொண்ட சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கு, அனுமதி அளிக்கும் அதிகாரம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், நகரமைப்புத்துறை ஒன்று தனியாக இருந்தாலும், திட்ட அனுமதி வழங்கும் நடவடிக்கைகள், மண்டல அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்
படுகின்றன.

மாற்றம்


இந்த அலுவலகங்களில், நகரமைப்பு வல்லுநர்கள் இல்லாததால், கட்டட அனுமதி தொடர்பான பணிகள், தாமதம் ஆவதாக புகார் கூறப்படுகிறது.

எனவே, சி.எம்.டி.ஏ.,வில் உள்ளது போன்று, மாநகராட்சியிலும் நகரமைப்பு வல்லுநர்களை, திட்ட அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் நடந்த சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், இது குறித்து வலியுறுத்தினார்.

ஆனால், ஆரம்ப நிலையில், அதற்கு சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள் சிலர், எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இதுகுறித்த தீர்மானம், சில திருத்தங்களுடன் அந்த கூட்டத்தில் நிறைவேறியது. இந்த விஷயத்தில், சில முக்கிய முடிவுகளை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரியவந்து உள்ளது.

ஒப்புதல்

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி ஆணையர் கோரியபடி, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து, குறிப்பிட்ட சில பதவிகளில் உள்ள அதிகாரிகளை, அயல்பணி அடிப்படையில் மாநகராட்சிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி திட்ட அதிகாரிகள், திட்ட உதவியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அவர்களை அனுப்ப இயலாது.

ஒப்புதல்

மூத்த திட்ட அதிகாரிகள் (சீனியர் பிளானர்), துணை திட்ட அதிகாரிகள் (டெபுடி பிளானர்) நிலையில் உள்ளவர்களை மட்டுமே, அயல்பணி அடிப்படையில் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டு அயல்பணி என்ற அடிப்படையில், அனுப்பப் படும் அவர்களுக்கான ஊதிய விகிதங்களை, தங்களால் சமாளிக்க முடியுமா என்பது குறித்து, மாநகராட்சி நிர்வாகத்தின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் காலி இடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய நிலவரம்

சி.எம்.டி.ஏ.,வில் தற்போதைய நிலவரப்படி, ஐந்து மூத்த திட்ட அதிகாரிகள், 23 துணை திட்ட அதிகாரிகள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர், தலைமை திட்ட அதிகாரிகளின் உதவியாளர்களாகவே உள்ளனர். திட்ட அனுமதியில், திட்ட அதிகாரிகள் அனுப்பும் கோப்பு களை, தலைமை திட்ட அதிகாரிக்கு, பரிந்துரைப்பதை தவிர, வேறு பணி இல்லாத சூழல் நிலவுகிறது.

 

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் ‘அம்மா உணவகம்’

Print PDF

மாலை மலர்             02.01.2014

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் ‘அம்மா உணவகம்’
 
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் ‘அம்மா உணவகம்’
சென்னை, ஜன.2 - முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல்வேறு நலத்திட்டங்களை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த பல மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் சென்னை வந்து இங்குள்ள மாநகராட்சி அதிகாரிகளிடம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து விவாதித்துள்ளனர். பின்னர் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களையும் அவர்கள் பார்வையிட்டு அங்கு பரிமாறப்படும் உணவின் தரத்தை உறுதி செய்துகொண்டதாக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரி ஜி.டி.தங்கராஜன் கூறியுள்ளார்.

மும்பை மற்றும் டெல்லி மாநில அதிகாரிகள் உணவகம் செயல்படும் விதம் குறித்தும் பொதுமக்களின் கருத்து எப்படி உள்ளது என்பது பற்றியும் கேட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்ற வசுந்தரா ராஜே சிந்தியா இத்திட்டத்தை உடனடியாக தனது மாநிலத்தில் அமல்படுத்த முடிவெடுத்து அங்கிருந்து அதிகாரிகள் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளார்.

அக்குழுவில் பங்கேற்றுள்ள கே.கே.சர்மா எனும் அதிகாரி திங்கட்கிழமையன்று அம்மா உணவகங்களை பார்வையிட்டபோது கூறியதாவது: மலிவான விலையில் தரமான உணவை ஏழை மக்களுக்கு இந்த உணவகங்கள் எப்படி கொடுக்கின்றன என தெரிந்துகொண்டோம். எங்கள் மாநிலத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வந்து இத்திட்டத்தை செயல்படுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும், ஐந்து ரூபாய்க்கு பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம் மற்றும் மூன்று ரூபாய்க்கு தயிர் சாதமும், 3 ரூபாய்க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 2400 பெண்கள் இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே முதலமைச்சரின் மழை நீர் சேகரிப்பு திட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்பொழுது அம்மா உணவகமும் சிறப்பான கவனத்தை ஈர்த்துவருவது மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை காய்கறி திட்டங்களை தங்கள் மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆக, தமிழக முதல்வரின் பல திட்டங்கள் இந்திய அரசின் கவனத்தையும், பல்வேறு மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 

தேனியில் ரூ.15 கோடியில் பென்னிகுயிக் பஸ் நிலையம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF

மாலை மலர்             02.01.2014

தேனியில் ரூ.15 கோடியில் பென்னிகுயிக் பஸ் நிலையம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்
 
தேனியில் ரூ.15 கோடியில் பென்னிகுயிக் பஸ் நிலையம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, ஜன. 2 - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா 15.1.2013 அன்று தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மண்டபம் திறப்பு விழாவில், தேனி அல்லி நகரம் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவை போற்றும் வகையில் கர்னல் ஜான் பென்னி குயிக் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் 15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலையத்தில் 59 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதிகளுடன் உணவகங்கள், கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள் வைப்பறை, நவீன கழிப்பிடம், முன்பதிவு மையங்கள், வரவேற்பு விசாரணை மையம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர் ஓய்வு அறை, தகவல் தொடர்பு அலுவலர் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை நகராட்சியில் 36 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்;

காஞ்சிபுரம் நகராட்சியில் 17 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதுப்பாளையம் ஒன்றியங்களைச் சார்ந்த 20,314 பேர் பயனடையும் வகையில் 40 குடியிருப்புகளுக்கு 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 18 குடியிருப்புகளைச் சேர்ந்த 14,547 பேர் பயனடையும் வகையில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்; 6 மாவட்டங்களிலுள்ள 9 பேரூராட்சிகளில் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 குடிநீர் வழங்கல் மேம்பாட்டுப் பணிகள்; என மொத்தம் 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திப்புரம் நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு நகராட்சியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்;

17 மாவட்டங்களில் உள்ள 22 பேரூராட்சிகளில் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 அலுவலகக் கட்டடங்கள்; 11 மாவட்டங்களில் உள்ள 34 பேரூராட்சிகளில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 41 சுகாதார வளாக கட்டடங்கள்; திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டடம்; காவேரிப்பட்டினம் மற்றும் குத்தாலம் பேரூராட்சிகளில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள்;

நான்கு மாவட்டங்களில் உள்ள 5 பேரூராட்சிகளில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் நவீன இறைச்சி கூடங்கள்; தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; என மொத்தம் 19 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி லான கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், சேலம் மாநகராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள புதிய அலுவலகக் கட்டடங்கள்;

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பேருந்து நிலையம்; விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகராட்சியில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்புகள்; என 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

மொத்தத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகளின் மொத்த மதிப்பு 118 கோடியே 2 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த், காம்ப்ளே, பேரூராட்சிகளின் இயக்குநர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் விஜயராஜ் குமார், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 218 of 3988