Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.12.65 கோடியில் புதிய ‘மாமன்ற கூட்ட அரங்கு’

Print PDF

தினகரன்                02.01.2014

மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.12.65 கோடியில் புதிய ‘மாமன்ற கூட்ட அரங்கு’

கோவை, : கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.12.65 கோடி யில் புதிதாக ‘மாமன்ற கூட்ட அரங்கு‘ கட்டப்பட உள்ளது. இதற்கான பணியை விரைவில் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் விக்டோரியா கூட்ட அரங்கு உள்ளது. இது, 1893ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கூட்ட அரங்கில்தான் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாதம்தோறும் நடந்து வருகிறது. இது, மிகவும் பழமையானது.

இக்கட்டடத்தின் தரம், சிவில் இன்ஜினீயரிங் துறைக்கு சவால் விடும் அளவுக்கும், பிரமிப்பு ஊட்டுவதாகவும் உள்ளது. பழைய மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 72 வார்டுகள் மட்டுமே இருந்தன. அப்போது, இந்த கூட்ட அரங்கு போதுமானதாக இருந்தது. ஆனால், தற் போது, வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துவிட்டதால், மாதம்தோறும் இங்கு மாமன்ற கூட்டம் நடத்த இடம் போதுமானதாக இல்லை. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர போதுமான இடவசதி இல்லை.

எனவே, புதிய மாமன்ற கூட்ட அரங்கு கட்ட கடந்த 2012-13ம் ஆண்டு மாநகராட்சி வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புராதன சின்னமாக விளங்கும் விக்டோரியா மன்றத்தை இடிக்காமல், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலேயே ரூ.9.70 கோடியில் புதிதாக மாமன்ற கூட்ட அரங்கம் கட்டுவது என முடிவுசெய்யப்பட்டது.

இதற்காக, அனுமதி வேண்டி கடந்த 24.7.2013 அன்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதையடுத்து, எஸ்.பி.எஸ்.அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரித்தது. அப்போது, பட்ஜெட் தொகை ரூ.12.65 கோடியாக உயர்ந்தது.

இதை, மாநகராட்சி பொது நிதியில் இருந்தே பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போது, கட்டட வரைபட அனுமதிக்காக நகரமைப்பு துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் அனுமதி கிடைத்துவிடும், அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் மிக விரைவாக துவங்கும் என மேயர் செ.ம.வேலுசாமி அறிவித்துள்ளார்.

 

ரூ.118 கோடியில் திட்டம்: முதல்வர்

Print PDF

மாலைச்சுடர்              02.01.2014

ரூ.118 கோடியில் திட்டம்: முதல்வர்
.
கோடநாடு, ஜன.2:  முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் 15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
.
மேலும், 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 19 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை திறந்து வைத்து, 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, அவர்களுக்கு நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்தும் விதத்தில், பொது சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதிலும், அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவதிலும்  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியின் புதிய பேருந்து நிலையம் 7.35 ஏக்கர் நிலப்பரப்பில்  15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த   பேருந்து நிலையத்தில் 59 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதிகளுடன் உணவகங்கள், கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள் வைப்பறை, நவீன கழிப்பிடம், முன்பதிவு மையங்கள், வரவேற்பு விசாரணை மையம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர் ஓய்வு அறை, தகவல் தொடர்பு அலுவலர் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 முதலமைச்சர் ஜெயலலிதா 15.1.2013 அன்று தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மண்டபம்   திறப்பு  விழாவில், தேனிஅல்லிநகரம் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கர்னல் ஜான் பென்னிகுயிக்  அவர்களின் நினைவை போற்றும் வகையில் கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில்  15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

 திருவண்ணாமலை நகராட்சியில் 36 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி நகராட்சியில்  3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்;காஞ்சிபுரம் நகராட்சியில் 17 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திருவண்ணாமலை, செங்கம்-புதுப்பாளையம்  ஒன்றியங்களைச் சார்ந்த 20,314 பேர் பயனடையும் வகையில் 40 குடியிருப்புகளுக்கு  1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்; நாகப்பட்டினம், குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 18 குடியிருப்புகளைச் சேர்ந்த  14,547 பேர் பயனடையும் வகையில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;  6 மாவட்டங்களிலுள்ள 9 பேரூராட்சிகளில் 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 குடிநீர் வழங்கல் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 64 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை, திருவத்திப்புரம் நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; கன்னியாகுமரி, பத்மநாபபுரம்  நகராட்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு நகராட்சியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்,17 மாவட்டங்களில் உள்ள 22 பேரூராட்சிகளில் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 அலுவலகக் கட்டடங்கள்;

11 மாவட்டங்களில் உள்ள 34 பேரூராட்சிகளில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 41 சுகாதார வளாக கட்டடங்கள்; திருவாரூர், நன்னிலம் பேரூராட்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டடம்; காவேரிப்பட்டினம் மற்றும் குத்தாலம் பேரூராட்சிகளில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள்; 4 மாவட்டங்களில் உள்ள 5 பேரூராட்சிகளில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் நவீன இறைச்சி கூடங்கள்; தேனி, கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 19 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை  முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும்,  சேலம் மாநகராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில்  2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும்  கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்  கட்டப்படவுள்ள  புதிய அலுவலகக் கட்டடங்கள்; ஈரோடு மாவட்டம்,  புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பேருந்து நிலையம்;   விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி நகராட்சியில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்புகள் என 18 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 09 January 2014 11:03
 

மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் வாடகை கட்டணம் 5 மடங்கு உயர்கிறது

Print PDF

தினகரன்            31.12.2013

மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் வாடகை கட்டணம் 5 மடங்கு உயர்கிறது

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபங்களுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் பழனிச்சாமி, ஆணையாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்றைய சாதாரண கூட்டத்தில் 74 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் 8வது தீர்மானமாக மாநகராட்சி மண்டபத்திற்கு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான விசிடிவி ரோட்டில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் மற்றும் தமயந்திபாபுசேட் திருமண மண்டபம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்த மண்டபங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு 19 ஆண்டுகள் ஆன நிலையில் நகரில் அமைந்துள்ள இதர திருமண மண்டபங்களுக்கு பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாலும், மண்டபங்களின் பராமரிப்பு செலவு, காவலர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு முதல்நாள் காலை 6 மணி முதல் மறுநாள் மதியம் 3 மணி வரை 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை 15 ஆயிரம் ரூபாயாகவும், முதல் நாள் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் பிற்பகல் 3 மணி வரை 2,500 ரூபாய் கட்டணத்தை 12 ஆயிரத்து 500 ரூபாயாகவும், பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை, இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை 1,250 ரூபாய் கட்டணத்தை 6 ஆயிரத்து 250 ரூபாயாகவும், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இதர தொண்டு நிறுவனங்களுக்கு கூட்டம் நடத்த (முகூர்த்தம் இல்லாத நாட்களில் மட்டும்) 8 மணி நேரத்திற்கு 400 ரூபாயை 2 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமயநதிபாபுசேட் திருமண மண்டபத்திற்கு முதல்நாள் காலை 6 மணி முதல் மறுநாள் மதியம் 3 மணி வரை 2 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை 10 ஆயிரம் ரூபாயாகவும், முதல் நாள் பிற்பகல் 3 மணி முதல் மறுநாள் பிற்பகல் 3 மணி வரை 1,500 ரூபாய் கட்டணத்தை 7 ஆயிரத்து 500 ரூபாயாகவும், பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரை, இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை 750 ரூபாய் கட்டணத்தை 4 ஆயிரம் ரூபாயாகவும், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இதர தொண்டு நிறுவனங்களுக்கு கூட்டம் நடத்த (முகூர்த்தம் இல்லாத நாட்களில் மட்டும்) 8 மணி நேரத்திற்கு 250 ரூபாயை 1,500 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணமாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


Page 222 of 3988