Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தேனியில் புதிய பஸ் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி              31.12.2013

தேனியில் புதிய பஸ் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

தேனியில் திங்கள்கிழமை கர்னல். ஜான் பென்னிகுயிக் நினைவு நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

     தேனியில், தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை சிட்கோ தொழிற்பேட்டை பின்புறம், நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.15.25 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல். ஜான் பென்னிகுயிக் நினைவாக, அவரது பெயரை தேனி புதிய பஸ் நிலையத்துக்கு சூட்டுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

   புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை பகல் 12.05 மணிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தேனியில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பங்கேற்று பேசினார். தேனி நகர் மன்றத் தலைவர் எஸ். முருகேசன், துணைத் தலைவர் வி. காசிமாயன், ஆணையர் எஸ். ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிதம்பரம் நன்றி கூறினார்.

புதிய பஸ் நிலைய திறப்பு விழாவை அடுத்து, தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், கோவை உள்ளிட்ட 6 வழித் தடங்களில் புதிய பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

 

பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காத உணவு விடுதிக்கு மாநகராட்சி அபராதம்

Print PDF

தினமணி              31.12.2013

பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காத உணவு விடுதிக்கு மாநகராட்சி அபராதம்

மதுரையில் பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காத உணவு விடுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

 மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4-இல் டவுன்ஹால் சாலை பகுதியில், அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடி சுகாதாரக்கேடு உருவாகி வருவதாக, ஆணையாளர் கிரண்குராலாவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அவரது உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் அ.தேவதாஸ் தலைமையில் மாநகராட்சி உதவி நிர்வாகப் பொறியாளர் சேகர், பாதாளசாக்கடை மேற்பார்வையாளர் சக்திவேல் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை டவுன்ஹால் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காமலும், காய்கறி கழிவுகள் மற்றும் உணவுக் குப்பைகளை கால்வாயில் கொட்டியதாலும் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையில் ஓடியது தெரியவந்தது.

 இதைத் தொடர்ந்து, அந்த உணவு விடுதிக்கு உதவி ஆணையாளர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மற்றம் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கால்வாய்களில் கொட்டி அடைப்பை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதோடு, கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையாளர் அ.தேவதாஸ் தெரிவித்தார்.

 

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு "ஆர்.ஓ.' குடிநீர் இயந்திரம்

Print PDF

தினமணி              31.12.2013

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு "ஆர்.ஓ.' குடிநீர் இயந்திரம்

சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் "ஆர். ஓ.' குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க மாநகராட்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு வரும் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவுள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாநகராட்சி சார்பில் இப்போது 86 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 93 குடும்ப நல மருத்துவமனைகளும், 12 அவசரகால பிரசவ மருத்துவமனைகளும் பராமரிக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முன்னிலையில் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பல மருத்துவமனைகளில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகளும் அவர்களுடன் வரும் உறவினர்களும் அவதியுறுகின்றனர். இதற்காக கேன் குடிநீர் வாங்கி மருத்துவமனைகளில் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் "ஆர்.ஓ.' குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது:

இப்போது மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குடும்ப நல மருத்துவமனைகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இல்லை. இதனால் நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் அவதியுற்று வருகிறார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு, 86 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 93 குடும்ப நல மருத்துவமனைகளில் ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படும். இதற்கான அறிவிப்பு அடுத்த நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளது.

இப்போது 12 அவசர கால பிரசவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்ளில் சிறிய அளவிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. இந்த மையங்களில் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து பெரிய இயந்திரங்கள் வழங்கப்படும்.

இவற்றுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் வெளியானவுடன் இயந்திரங்கள் கொள்முதல் செய்து நிறுவும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 230 of 3988