Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குரூப் 1 தேர்வு: மாநகராட்சி இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி              31.12.2013

குரூப் 1 தேர்வு: மாநகராட்சி இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி மாநகராட்சி சார்பில் அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

 இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: 79 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெற ஏதுவாக சென்னையில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது.

 இதன் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியை சென்னை மாநகராட்சி கட்டணமில்லாமல் அளித்து வருகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்பும், சென்னை மாநகராட்சிக்குள் படித்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படும்.

 இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், www.chenn​ai​corpor​ation.gov.in​ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பயிற்சி நடைபெறும் சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Print PDF

தினத்தந்தி            31.12.2013

மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் ஜெயா தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து 12 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பார்வையிட்ட மேயர், மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பழுதடைந்த தெருவிளக்குகளை பழுதுநீக்கம் செய்திடவும், சாக்கடைகளை தூர் வாரவும், கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நகரப்பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர்கள் அருணாசலம், நாகேஸ், நகர்நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர்கள் தனபாலன், தயாநிதி, பிரபுகுமார்ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், அமுதவள்ளி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட கூட்டம்

Print PDF

தினத்தந்தி             31.12.2013

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட கூட்டம்

திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் கோட்ட கூட்டம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர் மகாலட்சுமி மலையப்பன் பேசுகையில், காளியம்மன் கோவில் அருகில் உள்ள தரைப்பாலம் மிகவும் தாழ்வாக உள்ளதால் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. எனவே அந்த பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உறுப்பினர் மண்டி சேகர், தனது வார்டில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும் என்றும், உறுப்பினர் அன்புலட்சுமி, தெற்கு உக்கடை பகுதியில் புதிததாக தார்ச்சாலை அமைக் கவேண்டும் என்றும், உறுப்பினர் ரவிசங்கர் தனது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

பின்னர் தலைவர் சீனிவாசன் பேசுகையில் "அரியமங்கலம் கோட்டத்தை சேர்ந்த 18 வார்டுகளிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொசு மருந்து அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாய்களை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். உறுப்பினர்கள் முஸ்தபா, கயல்விழி சேகர், லீலாவேலு ஆகியோரும் தங்களது வார்டு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

 


Page 231 of 3988