Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

"அம்மா உணவகங்களில் 4 கோடி இட்லி விற்பனை

Print PDF

தினமணி              30.12.2013

"அம்மா உணவகங்களில் 4 கோடி இட்லி விற்பனை

அம்மா உணவகங்களில் 1 ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 4 கோடி இட்லி விற்பனையாகியுள்ளது என்று அதிமுக பேச்சாளர் கோபி.காளிதாஸ் கூறினார்.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில், அவர் மேற்கண்டவாறு பேசினார்.

கூட்டத்துக்கு கட்சியின் தொகுதிச் செயலர் என்.முனுசாமி தலைமை தாங்கினார்.

கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் சி.ஏழுமலை, எம்எல்ஏ அ.முகமது ஜான், மேயர் பா.கார்த்தியாயினி, நகர்மன்றத் தலைவர்கள் வேதகிரி (வாலாஜா), சித்ரா சந்தோஷம் (ராணிப்பேட்டை), பி.அப்துல் ரஹ்மான் (மேல்விஷாரம்), கட்சியின்  ஒன்றியச் செயலர் எம்.சி பூங்காவனம், நகரச் செயலர்கள் மோகன் (வாலாஜா), ஜே.பி.சேகர் (ராணிப்பேட்டை), ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலர் வி.முரளி, இணைச் செயலர் கே.பி.சந்தோஷம், நகர்மன்ற உறுப்பினர்கள் கீதா சேகர், மணிமேகலை, முன்னாள் உறுப்பினர் தியாகராஜன், எம்ஜிஆர் மன்றத்தின் நகரத் தலைவர் என்.சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பழைய மீன் மார்க்கெட்டை காலி செய்ய ஜனவரி 8 வரை கால அவகாசம்!

Print PDF

தினமணி              30.12.2013

பழைய மீன் மார்க்கெட்டை காலி செய்ய ஜனவரி 8 வரை கால அவகாசம்!

வேலூர் ஆபிஸர்ஸ் லைனில் சாரதி மாளிகை அருகேயுள்ள பழைய மீன் மார்க்கெட்டை காலி செய்ய ஜனவரி 8-ம் தேதி வரை வியாபாரிகளுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகத்துக்கும், மீன் வியாபாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

நீண்டகாலமாக இயங்கி வரும் இந்த மீன்மார்கெட்டில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்ததால், புதிய இடத்துக்கு மீன்மார்க்கெட் வளாகத்தை மாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்தது.

இதையடுத்து, பெங்களூர் சாலையில் சுமார் ரூ.1.25 கோடியில் 110 கடைகள் கொண்ட புதிய மீன்மார்க்கெட் வளாகம் கட்டப்பட்டது.

இவற்றுக்கு 8 முறை ஏலம் நடத்தப்பட்டும், அதில் வியாபாரிகள் பங்கேற்கவில்லை. புதிய மீன்மார்க்கெட் வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் டெண்டர் முறையை கைவிட்டு தற்போது இயங்கி வரும் மீன்மார்க்கெட்டில் கடை நடத்துவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் கோரினர். இதனால் மாநகராட்சி

நிர்வாகத்துக்கும், மீன்மார்க்கெட் வியாபாரிகளுக்கும் பிரச்னை எழுந்தது.

இதைத் தொடர்ந்து இம்மாதம் 30-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் பழைய மீன்மார்க்கெட் மூடப்படும் என்ற அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டது.

மீன்மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ டாக்டர் வி.எஸ்.விஜய் இரு தினங்களுக்கு முன் பழைய மீன்மார்க்கெட் மற்றும் புதிய மீன்மார்க்கெட் வளாகங்களை பார்வையிட்டு சுமுகத் தீர்வு காண முயற்சி எடுத்தார்.

இருப்பினும், மேயர் கார்த்தியாயினிக்கும், எம்எல்ஏவுக்கும் கடந்த ஓராண்டாகவே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், எம்எல்ஏவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில் மீன்மார்க்கெட் வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன் விசாரணை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதை அறிந்த மாநகராட்சி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை மீன்மார்க்கெட் வளாகத்துக்கான மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டதை அறிந்த மீன் மார்க்கெட் வளாகத்தில் வியாபாரிகள் பிற்பகலில்  திரண்டிருந்தனர். அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இப்பிரச்னையை மீண்டும் வியாபாரிகள் எம்எல்ஏவிடம் எடுத்துச் சென்று மீன்மார்க்கெட்டை காலி செய்ய 20 நாள் கால அவகாசம் பெற்றுத் தர கோரினர்.

இதுதொடர்பாக வியாபாரிகளின் கோரிக்கையை உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி பார்வைக்கு மாலையில் கொண்டுச் செல்லப்பட்டது.

ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு.

இந்நிலையில், மாலை 6 மணியளவில் மீன் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி எம்.சி.காலித், எம்எல்ஏ அஸ்லம் பாஷா உள்ளிட்ட சிலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் 119 கடைகள் உள்ளன.

இந்நிலையில், புதிய மீன்மார்க்கெட் வளாகத்தில் 110 கடைகள் மட்டுமே உள்ளன.

மேலும் 9 கடைகள் அப்பகுதியில் அமைக்க வேண்டும். மீன்மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் புதிய இடத்தில் இடமளிக்க வேண்டும். அதற்காக வரும் ஜனவரி 7ஆம் தேதி மாநகராட்சி நடத்தும் ஏலத்தில் பங்கேற்க தயாராக இருக்கிறோம்.

நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற சம்மதிக்கிறோம்' என வியாபாரிகள் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

அதையடுத்து ஜனவரி 8-ம் தேதி வரை பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் கடைகள் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை ஆட்சியர் இரா.நந்தகோபால் அளித்தார்.

 

திருவண்ணாமலையில் ஜனவரி 3 முதல் 7 வரை ஆதார் அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம்

Print PDF

தினமணி              30.12.2013

திருவண்ணாமலையில் ஜனவரி 3 முதல் 7 வரை ஆதார் அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம்

திருவண்ணாமலை நகராட்சியில் இரண்டாம் கட்டமாக ஜனவரி 1 முதல் 7 வரை ஆதார் அடையாள அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்கெனவே நடைபெற்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பொதுமக்களின் கைரேகை, விழித்திரை, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யும் முகாம் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 1, 2, 3-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜனவரி 3 முதல் 7 வரை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது விவரங்களை அளிக்கலாம்.

இதேபோல, 4 மற்றும் 5-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜனவரி 3 முதல் 7 வரை தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், 6 மற்றும் 7-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பே கோபுரத் தெருவில் உள்ள நகராட்சிப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொண்டு தங்களது கைரேகை, விழித்திரை, புகைப்படங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

தேசிய அடையாள அட்டை என்பது எதிர்காலத்தில் மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படும் மிக முக்கியமான அடையாள அட்டை.

 எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று நகராட்சி ஆணையாளர் பெ.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

 


Page 234 of 3988