Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடலில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை: ‘தேரி’ அமைப்பு பரிந்துரை

Print PDF

தினமணி    10.07.2016

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடலில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை: ‘தேரி’ அமைப்பு பரிந்துரை

பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமிடல்களில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை என்று ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸஸ் - தேரி) பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் அஜய் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கிராமப்புற, நகர்ப்புறங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இரண்டு ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைப் போக்க ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை தொடர்பாக ஆராயப்பட்டன.

நகர்ப்புறங்களின் மேம்பாட்டை பொருத்தே நம் நாட்டின் வளர்ச்சி அடங்கி உள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடல்களில் தேசிய அளவில் ஒருங்கிணைப்பு தேவை. மேலும், நகர்ப்புற திட்டமிடல்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், பழைய கட்டடங்களை மறுநிர்மாணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம் என்று அஜய் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

தேரி அமைப்பின் பரிந்துரை பற்றி மத்திய வனம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறைக்கான இணைச் செயலர் ஆர்.ஆர்.ராஸ்மி கூறுகையில், "பருவநிலை மாற்றம் காரணமாக நகர்ப்புறங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக "தேரி' அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களின் கட்டமைப்பு பணி மேற்கொள்வது மிகவும் சிக்கலானவை. எனவே, அதற்கேற்ப நகர்ப்புற திட்டமிடல்களில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்' என்றார்.

Last Updated on Tuesday, 12 July 2016 11:05
 

ரூ. 41 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு

Print PDF

தினமணி      11.02.2016

ரூ. 41 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு

பூந்தமல்லி நகராட்சி 7-ஆவது வார்டில் ரூ.41 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர்கள் பி.வி.ரமணா, எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பூந்தமல்லி நகராட்சி 7-ஆவது வார்டுக்கு உள்பட்ட எம்.எஸ்.வி.நகர், சின்னப்பா நகர் பகுதியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும நிதியில் இருந்து ரூ.41 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி கோபிநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பூங்காவைத் திறந்து வைத்தனர்.

குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நம்ம டாய்லட், மேல்மா நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இவ்விழாக்களில் பூந்தமல்லி எம்எல்ஏ மணிமாறன், ஒன்றியக் குழுத் தலைவர் திருநாவுக்கரசு, கூட்டுறவு சங்கத் தலைவர் கே.எஸ். ரவிச்சந்திரன், நிலவள வங்கித் தலைவர் ஜாவித் அகமது, நகரச் செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு: மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

Print PDF

தி இந்து                16.02.2015

தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு: மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை 

 தொற்று நோய் விழிப்புணர்வு குறித்து சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. ஜனவரி மாதம் முதல் இது வரை தமிழ்நாட்டில் எட்டு பேர் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியாகி உள்ளனர். எனவே, இதுபற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில், தொற்று நோய் வராமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கைகளையும் முகத்தையும் அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் வரும் போது கையை வைத்து வாயை மூடிக் கொண்டு இரும வேண்டும். காய்ச்சல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்ந்தால் அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மாநகரட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பன்றிக் காய்ச்சல் என்று நேரடியாக கூறினால், பொது மக்கள் பயப்படுவார்கள் என்பதால் தொற்று நோய் விழிப்புணர்வு நடவடிக்கைக்கான சுற்றறிக்கையாக இதை வெளியிட்டிருக் கிறோம். சில தனியார் பள்ளிகளில் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சி அப்படி வலியுறுத்தவில்லை. அது தேவை யில்லாத பீதியை உண்டாக்கும். காய்ச்சல் மற்றும் இருமல் வந்தால் அதை அலட்சியமாக நினைக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மேலும் இந்த விழிப்புணர்வு தகவல்களை ஒவ்வொரு நாளும் வழிபாட்டு நேரத்தில் நினைவுகூரவும் அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்பனா இதுபற்றி கூறும்போது, “எங்கள் பள்ளியில் ஏதாவது ஒரு மாணவருக்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் அல்லது இருமல் இருந்தால் அவரது பெற்றோரை அழைத்து தகவல் சொல்கிறோம்.

நாற்பது மாணவர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடாமல் பார்த்து கொள்கிறோம். எனவே காலை வழிபாடு வகுப்பறைகளிலேயே நடை பெறுகிறது. பள்ளியின் ஆண்டு விழா ஒத்தி வைக்கப் பட்டுள்ளது” என்றார்.

 


Page 25 of 3988