Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி குறைதீர் கூட்டம் சாலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினகரன்             27.12.2013

மாநகராட்சி குறைதீர் கூட்டம் சாலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மேயர் ஜெயா தலைமை வகித்தார். ஆணையர் தண்டபாணி முன்னிலை வகித்தார். சாலை மேம்பாடு, ஆக்ரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 15 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழுதடைந்த தெருவிளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்திடவும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

 

சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் 36 லட்சத்தில் வளர்ச்சி பணி

Print PDF

தினகரன்             26.12.2013 

சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் 36 லட்சத்தில் வளர்ச்சி பணி

மொடக்குறிச்சி: சிவகிரி பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிபணிகளுக்காக ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கினார். அந்தப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது. எம்.பி., கணேசமூர்த்தி, பணிகளைதுவக்கி வைத்தார்.

பாலமேடு பிரிவில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் சாலை ரூ.10 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. சாணார் பாளையத்தில் ரூ.1 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு, கவுண்டம்பாளையத்தில் ரூ.5 லட்சத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தலையநல்லூரில் ரூ.10 லட்சம் செலவில் கழிப்பிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை எம்.பி., கணேசமூர்த்தி துவக்கி வைத்தார்.

மேலும் அம்மன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி,  ரத்தினபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா ரூ.4 லட்சத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டிகளை அவர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிகளில் மாவட்ட மதிமுக அவைத்தலைவர் குழந்தைவேலு, ஒன்றிய செயலாளர் கொற்றவேல், நகர செயலாளர் சுப்பிரமணியம், அவைத்தலைவர் தலைசை கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற பவானி மக்களுக்கு நகராட்சி கெடு

Print PDF

தினகரன்             26.12.2013 

சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற பவானி மக்களுக்கு நகராட்சி கெடு

பவானி: பவானி நகரப் பகுதியில் சாக்கடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்துவிதமான நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பவானியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டன. பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சிரமம் கொடுத்த கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளும் அதிரடியாக அகற்றப்பட்டன. நகர வீதிகளில் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இதனால், நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டது. அப்போது, கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்த நகராட்சி நிர்வாகம் வரும் 31ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரி கூறுகையில், ‘பவானி நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் உள்ள சாக்கடை மேல் கட்டியுள்ள படிக்கட்டுகள், குளியல் அறைகள் மற்றும் இதர கட்டுமானங்களை தாங்களாகவே டிசம்பர் 31ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றி அதற்கான செலவுத் தொகை முழுவதும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும்‘ என்றார்.

 


Page 241 of 3988