Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு அலுவலகம், பூங்கா சுவர்களில் அழகிய ஓவியங்கள்

Print PDF

தினகரன்            13.12.2013

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு அலுவலகம், பூங்கா சுவர்களில் அழகிய ஓவியங்கள்

கோவில்பட்டி, : கோவில்பட்டியில் நகராட்சி பூங்கா உள்ளிட்ட நகராட்சிக்குட்பட்ட அலுவலக சுவர்களில் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகம், பசுவந்தனை ரோட்டில் உள்ள நகராட்சி ராஜாஜி பூங்கா, அண்ணா பஸ்நிலையம், ராமசாமிதாஸ் பூங்கா மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட அலுவலக சுவர்களில் விளம்பர வால்போஸ்டர், சினிமா போஸ்டர்களின் ஆக்கிரமிப்பினால் சுவர்கள் பொலிவிழந்து காணப்பட்டன.

இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட அலுவலகம் மற்றும் பூங்காக்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றிவிட்டு ஓவியங்களை வரைய நகராட்சி கமிஷனர் சுல்தானா உத்தரவிட்டார். இதையடுத்து சுவர்களில் உள்ள போஸ்டர்ள் அகற்றப்பட்டது. பின் நகராட்சிக்குட்பட்ட ராஜாஜிபூங்கா, ராமசாமிதாஸ் பூங்கா, அண்ணா பஸ்நிலையம் மற்றும் அனைத்து அலுவலக சுவர்களிலும் வண்ணமிகு ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

இதில் பறவைகள், விலங்குகள், மலர்கள், நிலத்தில் விவசாயி மாடுகளை பூட்டி ஏர் உழும் காட்சி, கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கிராமங்களில் அன்றைய காலங்களில் வீட்டின் முன்பு தானியங்களை வெயிலில் உலர வைத்திருக்கும்போது, அதனை ஏதாவது பறவைகள் வந்து கொத்தி தின்ன முயலும்போது, வீட்டுமுன்பு காவல் காக்கும் மூதாட்டிகள் தங்கள் காதில் அணிந்திருக்கும் தங்க பாம்படத்தை கழற்றி, தானியத்தை கொத்தி தின்னும் பறவைகள் மீது வீசுவதுபோன்ற தத்ரூபமாக காட்சிகளும், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, நீதிகேட்டு மணியோசை எழுப்பி மனுநீதி சோழனிடம் நீதிகேட்டும் பசு என பல்வேறு நன்னெறி கதைகளை நினைவூட்டும் வகையில் வண்ணமிகு ஓவியங்கள் வரைப்பட்டுள்ளது.

இந்த ஓவியங்களை பார்த்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

 

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் திட்டம் தலைமை பொறியாளர் தகவல்

Print PDF

தினத்தந்தி            13.12.2013

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் திட்டம் தலைமை பொறியாளர் தகவல்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மின் வினியோக சேவையை மேம்படுத்த ரூ.10 கோடியில் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. திட்டம் இந்த மாதம் தொடங்கப்படும் என்று கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் கூறினார்.

ஆலோசனைக்கூட்டம்

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோக சேவையை மேம்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.10 கோடி செலவில் மத்திய அரசின் நகர புனரமைப்பு நிறுவன உதவியுடன் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி. என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோவை மின் பகிர்மான கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகரசபைத்தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். செயற்பொறியாளர் முகமது முபாரக் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் தலைமை பொறியாளர் என்.அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:–

இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மேட்டுப்பாளையம் நகருக்கு பிரத்யேக உயரழுத்த மின் பாதை அமைத்து அதன்மூலம் தடையில்லா தொடர் மின் வினியோகம் வழங்கப்படும். நகரில் முதன்முறையாக உயரழுத்த புதைவட (கேபிள்) மின் திட்டம் அமைத்து மின் வினியோகம் வழங்கப்படும். இதற்காக மேட்டுப்பாளையம் –சிறுமுகை ரோட்டில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் இருந்து புதைவடம் அமைக்கும் பணி தொடங்கி, நியு எக்ஸ்டென்சன் வீதி, ஊட்டி மெயின்ரோடு காந்தி சிலை, ஆர்.எஸ்.ஆர்.சந்திப்பு, வனபத்ரகாளியம்மன் ரோடு, காட்டூர் ரெயில்வே கேட் வழியாக சான்–ஜோஸ் பள்ளி வரை 3.8 கிலோ மீட்டர் தூரத்தில் முடிவடையும்.

புதிதாக 130 மின் மாற்றிகள் மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைக்குள் அமைத்து அதன் மூலம் நிலையான மின்சாரம் வழங்கப்படும். ஏற்கனவே செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றியும், தரம் உயர்த்தியும், தொலை தூரத்திற்கும், ஏற்கனவே உள்ள தாழ்வழுத்த மின் பாதைகளில் உள்ள மின் கம்பிகளை மாற்றியும், தரம் உயர்த்தியும் சீரான மின் வினியோகம் செய்யப்படும். நகரில் அனைத்து வீடுகளிலும் உள்ள பழைய மீட்டர்களை எடுத்து விட்டு கணக்கீட்டை துல்லியமாக கண்டறிய புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்படும். திட்டப்பணிகள் இந்த மாதம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் அந்தந்த வார்டு நகரமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு என்.அனந்தகிருஷ்ணன் பேசினார்.

கூட்டத்தில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாமூர்த்தி, வெங்கடேசன், உதவிபொறியாளர்கள் சுரேஷ், பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மின்வாரிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜி.இளங்கோவன் நன்றி கூறினார்.

 

கோவை மாநகராட்சியின் வருவாய் அதிகரிப்பு

Print PDF

தினத்தந்தி            13.12.2013

கோவை மாநகராட்சியின் வருவாய் அதிகரிப்பு

சொத்து வரி, தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

வரி வருவாய் அதிகரிப்பு

கோவை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, மற்றும் குடிநீர் கட்டணம், அபாயகரமான பொருட்களை பாதுகாப்புடன் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி கட்டணம், மற்றும் மாநகராட்சி வணிக வளாக வாடகை, காலியிட வரி, வீடுகள் கட்டுவதற்கான வரைபட அனுமதி ஒப்புதல் ஆகியவற்றின் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது.

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, வீடு கட்டுவதற்கான திட்டவரைவு அனுமதி ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செலுத்தவும், ஆன்லைன் மூலம் ஒப்புதல் பெறுவதற்கான வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது. வரி செலுத்தாதவர்களின் பட்டியலும் ஆய்வு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமியின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

ரூ.157 கோடி

இதன்படி கடந்த ஜூன் மாதம் மட்டும் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட 2 சதவீதம் அளவுக்கு குறைந்து இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து வரி வருவாய் உயர்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை மொத்தம் ரூ.157 கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24.15 சதவீதம் அளவுக்கும், மே மாதம் 30.07 சதவீதம் அளவுக்கும், ஜூலை மாதம் 21.28 சதவீதம் அளவுக்கும், ஆகஸ்டு மாதம் 59.43 சதவீதம் அளவுக்கும், செப்டம்பர் மாதம் 32.32 சதவீதம் அளவுக்கும், அக்டோபர் மாதம் 55.64 சதவீதம் அளவுக்கும், நவம்பர் மாதம் 32.68 சதவீதம் அளவுக்கும் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

எண்ணிக்கையும் அதிகரிப்பு

தொழில் வரி, சொத்துவரி உயர்ந்துள்ளதுடன், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதன் காரணமாக வருவாய் உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளும் சொத்துவரி செலுத்தும் பட்டியலுடன் புதிதாக இணைக்கப்பட்டது. இதன்படி கடந்த 2012-13-ம் ஆண்டில் சொத்துவரி செலுத்தும் பட்டியல் 23,510 அளவுக்கு புதிதாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் மட்டும் 18 ஆயிரத்து 391 எண்ணிக்கை சொத்துவரி செலுத்தும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாய் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் சொத்து வரி வருமானம் ரூ.11 கோடியே 77 லட்சம் உயர்ந்துள்ளது.

உடனடியாக செலுத்தும் வசதி

காலியிட வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 4,994 அளவுக்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மற்றும் பிற அரசு துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்துபேசி தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

மாநகராட்சி வரி வருவாய் உயர்ந்து இருப்பதன் காரணமாக, மாநகராட்சிக்கு கடன் உதவி அளிக்கும் வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் மாநகராட்சியின் திரும்ப செலுத்தும் வசதி அதிகரித்து இருப்பதன் மூலம் திட்ட மேம்பாடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 


Page 255 of 3988