Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நாய்களைப் பிடிக்க நவீன வாகனம்

Print PDF

தினமலர்             13.12.2013

நாய்களைப் பிடிக்க நவீன வாகனம்

சிதம்பரம் : சிதம்பரம், கடலூர் நகராட்சிகளுக்கு நாய்கள் பிடிக்கும் நவீன வசதிகள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள 130 தெருக்களில் 2,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடித்து பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். அவற்றைப் பிடிக்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கவுன்சிலர்களும் நகர மன்றத்தில் பேசி பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கலெக்டர், முதல்வர் உள்ளிட்டோருக்கும் மனு அனுப்பினர். கவுன்சிலர்களின் நிர்பந்தத்தால், கடந்த 6 மாதங்களுக்கு முன், நகரில் திரிந்த 375 தெரு நாய்களைப் பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். இருந்த போதிலும் அனைத்து நாய்களையும் பிடிக்க முடிய வில்லை. நகராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று, தெரு நாய்களைப் பிடிக்க நவீன வசதி கொண்ட"" நாய்கள் பயண வாகனம்'' உருவாக்கப்பட்டு, தமிழகத்தில் 50 நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் கடலூர் நகராட்சிக்கும் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் மதிப்பு 6 லட்சம் ரூபாய். நாய்களைப் பிடித்து தனித்தனியாக அடைத்து வைக்க இந்த வாகனத்தில் தனிக்கூண்டு வசதி உள்ளது. கூண்டில் உள்ள நாய்களுக்கு சிகிச்சை அளிக்க, உணவு வழங்க வசதிகள் உள்ளன. கடலூர், சிதம்பரம் நகராட்சியில் திரியும் நாய்களைப் பிடித்து, இவ்வாகனத்தில் ஏற்றி வந்து கால்நடைத் துறை டாக்டர்கள் மூலம், நாய் ஒன்றுக்கு 150 ரூபாய் செலவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. 

 

இளநிலை உதவியாளர் தட்டச்சுப் பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத்தேர்வு

Print PDF

தினமலர்             13.12.2013

இளநிலை உதவியாளர் தட்டச்சுப் பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத்தேர்வு

மதுரை:மதுரை மாநகராட்சியில், இளநிலை உதவியாளர் தட்டச்சுப் பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத்தேர்வு, இதுவரை இல்லாத அளவிற்கு, நேர்மையுடன் நடத்தி முடித்தார் கமிஷனர் கிரண்குராலா. சிபாரிசு கடிதங்கள், குப்பைக்குச் சென்றன. மாநகராட்சியில், கண்கூடாக நடக்கும் அபத்தங்களில் ஒன்று, பணி நியமனம்.

விரும்பியவர்களுக்கு, விரும்பிய இடத்தில், விரும்பியதை பெற்று பணியமர்த்தும் கலாசாரம், காலம் தொட்டே நடந்து வருகிறது. முந்தைய கமிஷனர் நந்தகோபால் இருந்த போது, காலியாக இருந்த 40 இளநிலை உதவியாளர் தட்டச்சுப்பணியாளர் பணிக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், அறிவிப்பு வெளியாகி; 175 பேர் நேர்முகத்தேர்வில் பங்கேற்க, அழைப்புவிடுக்கப்பட்டது. 32 வயதிற்குட்பட்டவர்களை மாநகராட்சி கேட்டது; அவர்கள் அனுப்பியதோ, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதிலும், சிலர் 50ஐ கடந்தவர்கள். நேர்முகத்தேர்வுக்கு ஏற்பாடு செய்யும் நேரத்தில், வேலூர் கலெக்டராக நந்தகோபால் மாறுதலானார். புதிய கமிஷனராக கிரண் குராலா பொறுப்பேற்றதும், நேர்முகத்தேர்விற்கு ஏற்பாடு நடந்தது.

நேற்று காலை நேர்முகத்தேர்வு தொடங்கியது. அழைத்ததில், 50 பேர் "ஆப்சென்ட்'; 125 பேர் வந்திருந்தனர்."அவருக்கு கொடுத்தாச்சு... அங்கே பார்த்தாச்சு... நமக்கு முடிஞ்சு போச்சு... அடிக்கிற இடத்துல அடிச்சாச்சு...' என, "மனக்கோட்டை' கட்டி வந்தவர்களுக்கு, "ஆப்பு' அடித்தார், கமிஷனர். இதுவரை இப்படியொரு நேர்முகத் தேர்வு நடந்திருக்க வாய்ப்பில்லை. முதலில், சான்றிதழ் சரிபார்ப்பு, அதன் பின், "டைப் ரைட்டிங் மிஷினில்' தமிழில் 10 நிமிடம், ஆங்கிலத்தில் 10 நிமிடம், "டைப்' செய்ய வேண்டும். பின், கம்ப்யூட்டரில், தமிழில் 10 நிமிடம், ஆங்கிலத்தில் 10 நிமிடம் "டைப்' செய்ய வேண்டும்.

அதன் பிறகு தான், மற்றவை. கமிஷனரின் இந்த உத்தரவைக் கேட்டு ஆடிப்போன மாநகராட்சி பணியாளர்கள், "சார்... நம்மிடம் ஒரு "டைப் மிஷின்' கூட இல்லை; அதுவும் இல்லாமல், நமக்கு "டைப் ரைட்டிங்'கில் வேலை இல்லை,' என்றனர். "தகுதியான பணியாளர்கள்தான், நமக்கு வேண்டும்; நம்மிடம் இல்லையென்றால், வெளியில் வாடகைக்கு வாங்குங்க...' என, கமிஷனர் உத்தரவிட, அவசரம் அவசரமாக "மிஷின்கள்' தேடி கொண்டுவரப்பட்டன. தேர்வை, கமிஷனர், தன் அறையில் இருந்தபடி, வீடியோ மூலம், தேர்வை பார்வையிட்டார். சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த கருத்தரங்கு கூடம், கம்யூட்டர்கள் வைத்திருந்த மேயர் கலந்துரையாடல் அரங்கில், "கேமரா' வசதியில்லை என, அதிகாரிகள் கூறியபோது, "கேமரா வைத்த பின், நேர்முகத் தேர்வை தொடங்குங்கள்,' என கூறிவிட்டார்.

அதனால், அவசரமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றையும், அறையிலிருந்தபடி கமிஷனர் பார்வையிட்டார். முதல் நாள் இரவிலிருந்தே, கமிஷனர் அறை நோக்கி, நிறைய சிபாரிசு கடிதங்கள் வந்தன; அவை அனைத்தும், "குப்பைத் தொட்டிக்கு' சென்றதுடன், நேற்று முன்தினம் முதலே, பிறரை சந்திப்பதையும் கமிஷனர் தவிர்த்தார். இதனால், "திறமைக்கு வாய்ப்புக்கு கிடைக்கும்,' என, தேர்வுக்கு வந்தவர்கள், மகிழ்ச்சியடைந்தனர்.

 

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விலை ரூ.1.72 கோடி ரியல் எஸ்டேட் தொழிலை மிஞ்சும் அளவிற்கு திட்டம்

Print PDF

தினமலர்             13.12.2013 

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விலை ரூ.1.72 கோடி ரியல் எஸ்டேட் தொழிலை மிஞ்சும் அளவிற்கு திட்டம்

திருவான்மியூரில், வீட்டுவசதி வாரிய சுயநிதி திட்டத்தில், புதிதாக கட்டப்பட உள்ள உயர்தர வீடுகளுக்கான விலை, 1.72 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

பட்டினப்பாக்கத்தில், இன்னும் இறுதி திட்ட ஒப்புதல் கிடைக்காத நிலையில், சுயநிதி அடிப்படையில் குடியிருப்பு கட்டும் திட்டத்தை, வீட்டுவசதி வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில், வீட்டின் விலை 1.99 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த அளவுக்கு, விலை கொடுத்து, வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால், இதற்கான, விண்ணப்ப விற்பனைக்கான காலக்கெடு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ரூ.1.72 கோடி

இந்த நிலையில், திருவான்மியூர் இந்திரா நகரில், 'இம்ப்காப்ஸ்' அருகில், 204 வீடுகள், கட்டும் திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில், சுயநிதி அடிப்படையில் புதிதாக, 40 வீடுகளை கட்ட வீட்டுவசதி வாரியம் முடிவு செய்து உள்ளது.

இப்போது, இதற்கான விற்பனை அறிவிப்பை வாரியம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, இங்கு உயர் வருவாய் பிரிவினருக்கான, வீடுகளின் விலை, 1.72 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், கார் நிறுத்தும் இடத்துக்கு மட்டும் தனியே, 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில், நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகளின் விலை, 1.40 கோடி ரூபாய், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகளின் விலை, 54 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில், வீடு வாங்க, நேற்று முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பணமாக, வீட்டின் விலையில், ஐந்து சதவீத தொகையை செலுத்த வேண்டும் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்து உள்ளது.

 


Page 256 of 3988