Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி           12.12.2013

சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட வடக்குப்பேட்டை, சத்யா ரோடு, கோட்டணக்காரவீதி, நிர்மலா தியேட்டர்ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்டது. இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு சத்தி நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்த பகுதிகளுக்கு சத்தி நகரமைப்பு ஆய்வாளர் பி.செல்வம், துப்புரவு அதிகாரி சக்திவேல் ஆகியோர், நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் நேரில் சென்று போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

சேலம் ஆனந்தா இறக்கம் மேம்பாலத்தில் ரூ.1½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள்

Print PDF

தினத்தந்தி           12.12.2013

சேலம் ஆனந்தா இறக்கம் மேம்பாலத்தில் ரூ.1½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள்

சேலம் ஆனந்தா இறக்கம் மேம்பாலத்தில் ரூ. 1½ கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தார்சாலை அமைத்தல்

சேலம் டவுன் ஆனந்தா இறக்க உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பாலத்தை விரிவுபடுத்த, தனியாரிடம் இருந்து ரூ. 2½ கோடி மதிப்பில் நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தி கிரயம் செய்தது. அதன்பிறகு பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இருபுறமும் மண்சாலை அமைக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது.

இந்த மண்சாலையில் ரூ. 1½ கோடி மதிப்பில் புதியதாக தார்சாலை அமைத்து மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், ஆணையாளர் அசோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தார்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மேயர் கேட்டுக்கொண்டார்.

ஒரு வாரத்தில் பணிகள் முடியும்

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் அசோகனிடம் கேட்டபோது, ஆனந்தா இறக்க உயர்மட்ட மேம்பாலம் இருபுறமும் ஒரு வாரத்திற்குள் தார்சாலை போடப்பட்டு விடும். அதைத்தொடர்ந்து கடை வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆனந்தா புதிய பாலத்தை ஒருவழிப் பாதையாக பயன்படுத்தலாமா? என போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், என்றார்.

இந்த ஆய்வின்போது, மண்டலக்குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் சித்ரா, முருகன், செயற்பொறியாளர்கள் அ.அசோகன், காமராஜ், வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, மதுசூதனன், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

தொழில்–சொத்து வரிகள் மூலம் கோவை மாநகராட்சியின் வரிவருவாய் அதிகரிப்பு

Print PDF

தினத்தந்தி           12.12.2013

தொழில்–சொத்து வரிகள் மூலம் கோவை மாநகராட்சியின் வரிவருவாய் அதிகரிப்பு

கோவை, - சொத்து வரி, தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

வரி வருவாய் அதிகரிப்பு

கோவை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, மற்றும் குடிநீர் கட்டணம், அபாயகரமான பொருட்களை பாதுகாப்புடன் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி கட்டணம், மற்றும் மாநகராட்சி வணிக வளாக வாடகை, காலியிட வரி, வீடுகள் கட்டுவதற்கான வரைபட அனுமதி ஒப்புதல் ஆகியவற்றின் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது.

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, வீடு கட்டுவதற்கான திட்டவரைவு அனுமதி ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செலுத்தவும், ஆன்லைன் மூலம் ஒப்புதல் பெறுவதற்கான வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது. வரி செலுத்தாதவர்களின் பட்டியலும் ஆய்வு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமியின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

ரூ.157 கோடி

இதன்படி கடந்த ஜூன் மாதம் மட்டும் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட 2 சதவீதம் அளவுக்கு குறைந்து இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து வரி வருவாய் உயர்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை மொத்தம் ரூ.157 கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24.15 சதவீதம் அளவுக்கும், மே மாதம் 30.07 சதவீதம் அளவுக்கும், ஜூலை மாதம் 21.28 சதவீதம் அளவுக்கும், ஆகஸ்டு மாதம் 59.43 சதவீதம் அளவுக்கும், செப்டம்பர் மாதம் 32.32 சதவீதம் அளவுக்கும், அக்டோபர் மாதம் 55.64 சதவீதம் அளவுக்கும், நவம்பர் மாதம் 32.68 சதவீதம் அளவுக்கும் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

எண்ணிக்கையும் அதிகரிப்பு

தொழில் வரி, சொத்துவரி உயர்ந்துள்ளதுடன், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதன் காரணமாக வருவாய் உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளும் சொத்துவரி செலுத்தும் பட்டியலுடன் புதிதாக இணைக்கப்பட்டது. இதன்படி கடந்த 2012–13–ம் ஆண்டில் சொத்துவரி செலுத்தும் பட்டியல் 23,510 அளவுக்கு புதிதாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் மட்டும் 18 ஆயிரத்து 391 எண்ணிக்கை சொத்துவரி செலுத்தும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாய் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் சொத்து வரி வருமானம் ரூ.11 கோடியே 77 லட்சம் உயர்ந்துள்ளது.

உடனடியாக செலுத்தும் வசதி

காலியிட வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 4,994 அளவுக்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மற்றும் பிற அரசு துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்துபேசி தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

மாநகராட்சி வரி வருவாய் உயர்ந்து இருப்பதன் காரணமாக, மாநகராட்சிக்கு கடன் உதவி அளிக்கும் வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் மாநகராட்சியின் திரும்ப செலுத்தும் வசதி அதிகரித்து இருப்பதன் மூலம் திட்ட மேம்பாடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 


Page 258 of 3988