Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஓமலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சட்டை அணிய அனுமதி

Print PDF

தினகரன்              10.12.2013

ஓமலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சட்டை அணிய அனுமதி

ஓமலூர், : நவநாகரீக காலத்திலும் அரைக்கால் சட்டை (டிராயர்) அணிந்து கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டி தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியால் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய பேண்ட், சர்ட் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகள், மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 120 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் காலம் காலமாக அரைக்கால் சட்டையுடன் துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர். அரைக்கால் சட்டை அணிந்து பணியாற்றுவது இவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அனைத்து தரப்பு வயதினரும் ஈடுபட்டுள்ளதால், அரைக்கால் சட்டையுடன் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருவது சங்கடத்தை ஏற்படுத்தியது.

இவர்கள், மற்றவர்களை போல பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்ற விரும்பினர். இதுகுறித்த செய்தி, தினகரன் நாளிதழில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியியானது. இதனை தொடர்ந்து இந்த நிலையை மாற்ற ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்ற அனுமதி அளித்ததோடு, அதை வாங்கியும் கொடுத்துள்ளது. தற்போது ஓமலூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்ற பணியாளர்களை போல காக்கி கலர் பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்றி வருகின்றனர். 

 

கோமதிபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

Print PDF

தினகரன்              10.12.2013

கோமதிபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மதுரை, : கோமதிபுரம், யாகப்பா நகர் பகுதிகளில் சுகாதார பணிகளை மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா பார்வையிட்டார்.

மதுரை கோமதிபுரம் பாரதியார் நகர் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு சிறிய குழாய்கள்  பதிக்கப்பட்டிருந்தன. இதனால் குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இது குறித்து மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆணையாளர் கிரண்குராலா அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பெரிய குழாய் பதித்து நிரந்தர தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்பு யாகப்பா நகரில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பார்வையிட்டு வீடுகளின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், நீரில் அபேட் மருந்து ஊற்றும்படியும், கொசுவை ஒழிக்க மருந்து அடிக்கும்படி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில் உதவி ஆணையாளர் தேவதாஸ், நகர் நல அலுவலர் யசோதாமணி, செயற்பொறியாளர் திருஞானம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

தெற்கு தில்லி மாநகராட்சி: முன்வரைவு பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினமணி              10.12.2013

தெற்கு தில்லி மாநகராட்சி: முன்வரைவு  பட்ஜெட் தாக்கல்

தெற்கு தில்லி மாநகராட்சியின் 2013-14-ஆம் ஆண்டுக்கான முன்வரை பட்ஜெட்டை மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

 தெற்கு தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்வரைவு பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியது: நிகழ் நிதியாண்டில் ரூ. 2,961 கோடி அளவுக்கு வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், கடந்த 11 மாதங்களில் ரூ. 2,982 கோடி வரி வசூலாகியுள்ளது. வரும் நிதியாண்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது. வரும் நிதியாண்டில் மாநகராட்சிக்குத் தனி அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, துவாரகா பகுதியில் நிலம் ஒதுக்க தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

 வரும் நிதியாண்டில் தெற்கு தில்லி மாநகராட்சி ஊழியர்களுக்காக கிரேட்டர் கைலாஷ், தில்லி கேட் - அம்பேத்நகர் விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள்   கட்டவும், ஏற்கெனவே கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மாநகராட்சி ஊழியர் குடியிருப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 தெற்கு தில்லி மாநகாட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குப் பராமரிப்புப்  பணிகளுக்காக நவீன ஹைட்ராலிக் ஏணி இயந்திரத்தை வாங்கவும், கூடுதலான வாகன மையங்களை அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  தெற்கு தில்லி மாநகாட்சியின் நான்கு மண்டலங்களிலும் பேரிடர் மேலாண்மை மையங்கள், அனைத்து வார்டுகளிலும் கழிவு சுத்திகரிப்பு ஆலை, மாநகராட்சியின் சார்பில் வாடகை சைக்கிள் நிலையங்கள் அமைக்கத் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மேலும்,மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தவும், கூடுதல் தோட்டப் பராமரிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 பூங்காக்களில் சேரும் இலைக் குப்பைகளைக் கொண்டு பசுமை மேலாண்மைத் திட்டத்தின் கீழ் உரங்களைத் தயாரித்து, குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தொடக்கக் கல்வி மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் 19 சதவீத நிதி  ஒதுக்கப்படும். புதிதாக 19 பள்ளிகள் தொடங்கப்படும்.

புதிய வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் வாகன நிறுத்த வரியை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 4 ஆயிரத்தை ரூ. 8 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ரூ. 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 8 ஆயிரமாகவும், ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 15 ஆயிரமாகவும், ரூ. 20 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆணையர் மணீஷ் குப்தா.

 


Page 263 of 3988