Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சொத்து வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு

Print PDF

தினமணி               09.12.2013

சொத்து வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு

திண்டுக்கல் நகராட்சி பகுதியில் சொத்துவரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 திண்டுக்கல் நகராட்சியில் ரூ.1.25 கோடி வரை வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இதனை அடுத்து நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் மூலம் பாக்கித் தொகையை வசூலித்து வருகின்றனர்.

 அதன்படி வரி செலுத்தாத கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

 வரி செலுத்தாத நபர்களை ஏ, பி, சி என 3 வகையாக பிரித்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.10,000க்கு மேல் வரி பாக்கி உள்ளவர்கள் ஏ பிரிவிலும், ரூ.5000 முதல் ரூ.10,000 வரை பி பிரிவிலும், ரூ.5000க்கு கீழ் சி பிரிவு என வகைப்படுத்தி வரி வசூல் நடைபெற்று வருகிறது.

  ஏ பிரிவில் உள்ள 80 பேரில், நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் 40க்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.40 லட்சம் வரிபாக்கி உள்ளது. அதேபோல் பி பிரிவிற்குள்பட்டோரிடமிருந்து இதுவரை ரூ.6 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மேலும் ரூ.12 லட்சம் நிலுவையில் உள்ளது.

  சி பிரிவைப் பொறுத்தவரை இதுவரை ரூ.35 லட்சம் வரி பாக்கியுள்ளது. அந்தப் பணத்தை வசூலிக்க, வருவாய்த்துறையோடு, பொறியாளர் பிரிவும் இணைந்து செயல்படுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  அதன்படி வரி பாக்கி வைத்துள்ள வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை புதன்கிழமை முதல் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

   இதுகுறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் கே. மணிகண்டன், பி. சுரேஷ் ஆகியோரிடம் கேட்டபோது, நகராட்சிப் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டின் உரிமையாளர் வரி செலுத்துவார் என விட்டு விடுகின்றனர். ஆனால் உரிமையாளரோ, குடியிருப்பவர் செலுத்துவர் என வரி கட்டுவதில்லை. இதனால் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் அதிகப்படியான தொகை நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது என்று தெரிவித்தனர்.

 

அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம் கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி                09.12.2013

அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம் கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை

நெல்லையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது. கலெக்டர் கருணாகரன் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விளம்பர பேனர்கள்

நெல்லை மாநகரில் தொழில், வியாபாரத்தை பெருக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் விளம்பர பேனர்களை வைத்து உள்ளனர். சாலையோரங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களின் மீதும், தனியார் கட்டிடங்களின் காம்பவுண்டு சுவரையொட்டியும் இந்த விளம்பர பேனர்களை வைத்து உள்ளார்கள்.

இந்த பேனர்களை நிறுவுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நெல்லையில் பெரும்பாலான பேனர்கள் அனுமதி பெறாமலும், குறைந்த அளவுக்கு அனுமதி பெற்று விட்டு பெரிய அளவிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அகற்றப்பட்டன

இவ்வாறு அரசு அனுமதி இல்லாமல் சாலையோரங்கள் மற்றும் இதர இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பேனர்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றுமாறு நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் உத்தரவிட்டார். அதற்காக குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசமும் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு உள்ள விளம்பரப் பேனர்கள், தட்டி போர்டுகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. நெல்லை மாநகர எல்லைப்பகுதியான தாழையூத்து சோதனைச்சாவடியில் இருந்து தச்சநல்லூர் ரவுண்டானா வரை மதுரை ரோட்டின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. இதே போல் தச்சநல்லூர், உடையார்பட்டி பகுதிகளிலும் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

மாநகராட்சி ஆணையாளர் த.மோகன் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மெர்லின் கிறிஸ்டல், இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணசாமி, சாலை ஆய்வாளர் முனியசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரம் கொண்டும், வெல்டிங் இயந்திரம் கொண்டும் பேனருக்காக தரையில் நிறுவப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த பணியை ஏராளமான பொது மக்கள் கூடி நின்று பார்த்தனர். இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த பணிகளை கலெக்டர் மு.கருணாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில் பேனர்கள் அகற்றும் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக அரசு உத்தரவுப்படி அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணி மாநகராட்சி பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர்கள் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறை ஆகிய துறைகளின் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். அரசு விதிகளுக்கு மாறாக மாநகராட்சி பகுதியில் 251 விளம்பரப் பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நடக்கும்

ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பால் பல்வேறு பகுதிகளில் விளம்பரப் பேனர்களை அதன் உரிமையாளர்களே அகற்றி விட்டனர். விளம்பரப் பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பேனர்களும் அகற்றப்படும். இதுபோல் மாவட்டத்தின் பிறபகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள் முழுமையாக அகற்றப்படும். அதற்கான நடவடிக்கையில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.

 

பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு

Print PDF

தினமலர்            07.12.2013

பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு

திருச்சி: மூன்றாயிரம் ரூபாய் செலுத்தி பசுமை திட்டத்தில் மரம் வளர்க்க திருச்சி மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பசுமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், பஞ்சப்பூர் பகுதியில் மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.

இங்கு நகர்புற பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சியால் பராமரிக்கப்படவுள்ளது. இப்பணிக்கு மரம் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் மக்கள் பங்களிப்பாக பெறப்பட்டு, இந்த நிதியை மூலதனமாக கொண்டு பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநகாட்சியை பசுமையான திருச்சியாக மாற்றிடவும், சுற்றுசூழலை பாதுகாத்திடவும் மாநகர மக்களின் பங்களிப்பை மாநகராட்சி நிர்வாகம் எதிர் நோக்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு தங்களது ஆதரவினை வழங்கி தங்களது உற்றார் உறவினர் நண்பர்களிடம் எடுத்துக் கூறி அவர்களையும் இத்திட்டத்தில்பங்கேற்க செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பட்டய கணக்கர், டாக்டர்கள், வக்கீல்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் வணிக பேரவைகள், வங்கி நிறுவனங்கள், பொறியாளர் குழுமங்கள், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்கள் ஆகியோருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புதிய பசுமை திட்டத்தில் தாங்களும் பங்கேற்று உரிய படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து மரக்கன்று ஒன்றினை பராமரிப்புத் தொகைக்கான வங்கி டி.டி.,யை ஆணையர், திருச்சி மாநகராட்சி என்ற பெயரில் அனுப்பி, தங்களது பங்கேற்பினையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 268 of 3988