Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

40 மைக்ரானுக்கு குறைவானதா? பிளாஸ்டிக் அளவு கண்காணிக்க நவீன கருவி

Print PDF

தினகரன்           05.12.2013 

40 மைக்ரானுக்கு குறைவானதா? பிளாஸ்டிக் அளவு கண்காணிக்க நவீன கருவி

சிட்லபாக்கம், : பாலித்தீன் பயன்பாட்டிற்கு தடை விதித்தாலும், பல இடங்களில் 40 மைக்ரானுக்கு மேல் உள்ளதாக கூறி குறைவான மைக்ரான் பிளாஸ்டிக்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். இந்த பயன்பாட்டை கண்காணித்து பறிமுதல் செய்ய பேரூராட்சிகள் தோறும் பிளாஸ்டிக் அளவை அளக்கும் நவீன மைக்ரோ மீட்டர் கருவி வாங்கப்பட்டு வருகிறது.

பேரூராட்சிகளில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக்களை தடையின்றி பயன்படுத்துகின்றனர். பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வுக்கு செல்லும்போது, 40 மைக்ரானுக்கு மேல் உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதை அலுவலர்களால் பரிசோதிக்க முடியாமல், திரும்பி செல்கின்றனர்.

மைக்ரான் அளவை அளக்கும் நவீன மைக்ரோ மீட்டர் கருவி பயன்படுத்த அரசு அறிவுறுத்தியது. இதன்படி டிஜிட்டல் மீட்டர்களை பேரூராட்சி நிர்வாகங்கள் வாங்கி வருகின்றன.

இதுகுறித்து, சிட்லபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரமோகன் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடத்தப்படும் ஆய்வின் போது, பிளாஸ்டிக் அளவை கண்காணிக்க கருவி வாங்கப்பட்டுள்ளது. 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பயன்படுத்தினால், உடனடியாக பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்தினால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

தார் சாலை பணி

Print PDF

தினமலர்           05.12.2013 

தார் சாலை பணி

புதுச்சேரி: ஆனந்தரங்க பிள்ளை நகரில் 10 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணிகளை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.தட்டாஞ்சாவடி தொகுதி வினோபா நகர் வார்டுக்கு உட்பட்ட ஆனந்தரங்க பிள்ளை நகரில், தார் சாலை அமைக்க 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஆனந்தரங்க பிள்ளை நகரில் நடந்த நிகழ்ச்சியில், அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர்கரை நகராட்சி உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், என்.ஆர்.காங். கட்சி நிர்வாகிள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

முழுமை திட்ட மறு ஆய்வுக்கு கால அவகாசம் அரசு பதிலுக்காக சி.எம்.டி.ஏ., காத்திருப்பு

Print PDF

தினமலர்           05.12.2013 

முழுமை திட்ட மறு ஆய்வுக்கு கால அவகாசம் அரசு பதிலுக்காக சி.எம்.டி.ஏ., காத்திருப்பு

இரண்டாவது முழுமை திட்டத்தை (மாஸ்டர் பிளான்) மறு ஆய்வு செய்ய, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) ஓராண்டு கால அவகாசம் கேட்டு உள்ளது.

சென்னை, பெருநகர் பகுதியில், 2026ம் ஆண்டு வரை, ஏற்படக்கூடிய வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, உருவாக்கப்பட்ட இரண்டாவது முழுமை திட்டம், 2008ம் ஆண்டு செப்டம்பர், 2ம் தேதி, நடைமுறைக்கு வந்தது.

பொருளாதாரம், போக்குவரத்து, உறைவிடம், உள்கட்டமைப்பு, திடக் கழிவு மேலாண்மை குறித்த, தற்போதைய நிலை, 2026ம், ஆண்டு வரை ஏற்படக்கூடிய வளர்ச்சி, அதற்கான தேவையான திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் இதில் தெரிவிக்கப்பட்டன.

குழுக்கள்

இந்த பரிந்துரைகளை, செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குழு, நில பயன்பாடு மற்றும் சுற்றுச் சூழல் குழு, போக்குவரத்துக் குழு, உறைவிடம் மற்றும் உள் கட்டமைப்பு குழு, திட்ட முதலீடு மற்றும் ஆளுமை குழு ஆகிய ஐந்து குழுக்கள், அமைக்கப்பட்டு உள்ளன.

நகரமைப்பு சட்டப்படி, முழுமை திட்ட விதிமுறைகளின்படி, இந்த குழுக்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, புதிய திட்டங்களுக்கான, பரிந்துரைகளை வழங்க வேண்டும். இந்த பரிந்துரைகளின் செயலாக்கம், முழுமை திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, முடிவுகள் எடுக்க முழுமை திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு, ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

மறு ஆய்வு


சி.எம்.டி.ஏ.,வின், இரண்டாவது முழுமைத்திட்டம் அமலாகி ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், அதை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், புதிய திட்டங்களுக்கான பரிந்துரைகள், வழங்குவதற்கான குழுக்கள் முறையாக செயல்படாததால், முழுமை திட்டத்தை இப்போதைக்கு மறு ஆய்வு செய்ய வேண்டாம் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இத்தகைய முடிவுகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், தன்னிச்சையாக எடுக்க முடியாது. இதனால், இதற்கு, அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.

கால அவகாசம்

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவர், கூறியதாவது:

இரண்டாவது, முழுமை திட்டத்தை மறு ஆய்வு செய்வதை, ஓராண்டு ஒத்தி வைக்க, அரசின் அனுமதி கேட்டு, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது. ஆனால், ஓராண்டு வரை, இந்த பணிகளை ஒத்தி வைக்காமல், இப்போதே, அதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ.,வுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம்.

நிர்வாக ரீதியாக, இதுகுறித்த விவரங்கள் சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகளுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 277 of 3988