Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சத்தி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன்             04.12.2013

சத்தி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கோபி சப்கலெக்டர் சந்திரசேகர் சாகமுரியின் உத்தரவின்பேரில் கோபி, பவானி பஸ்நிலையங்களில் கடைக்காரர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதைத்தொடந்து சத்தியமங்கலம் பஸ்நிலையத்திலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனால் ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமித்த பகுதிகளை தானாகவே முன்வந்து அகற்றினர். இதற்கிடையே நேற்று நகராட்சி அலுவலக ஊழியர்கள் பஸ்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Wednesday, 04 December 2013 09:15
 

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு

Print PDF

தினகரன்             04.12.2013

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு

கோவை, : கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை ஈரோட்டில் நடக்கவுள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாடு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான போட்டி கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. இதில் கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வித்யபிரியா, தீபா ஸ்ரீ, கஸ்தூரி, பாத்திமா, வித்யா ஆகி யோரின் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.

தற்போது இந்த மாணவிகளின் மனித ஆற்றல் என்ற தலைப்பின் கீழ் ‘மனித சமுதாயம் நோய்களை நோக்கி செல்கிறது’ என்ற ஆய்வு கட்டுரை மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்துகள் உள்ளது.

மேலும், இம்மாணவிகள் ரத்தினபுரி பகுதியில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களையும் தற்போது வினியோகித்து வருகின்றனர். இந்த மாநில அளவிலான மாநாட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் மாணவிகளின் ஆய்வு கட்டுரை 21வது தேசிய அளவிலான குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படும்.

 

ரிப்பன் மாளிகை 100வது ஆண்டு விழா ‘நேற்று இன்று நாளை’ குறும்படம் விரைவில் வெளியீடு

Print PDF

தினகரன்             04.12.2013

ரிப்பன் மாளிகை 100வது ஆண்டு விழா ‘நேற்று இன்று நாளை’ குறும்படம் விரைவில் வெளியீடு

சென்னை, : மாநகராட்சி செயல்படும் ரிப்பன் மாளிகைக்கு கடந்த 26ம் தேதியுடன் 100 வயது முடிந்தது. இதையொட்டி ரிப்பன் மாளிகை குறித்த குறும்படம் விரைவில் வெளியிடப்படுகிறது.

ரிப்பன் மாளிகை 1909 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1913 நவம்பர் 26ல் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 2009 அக்டோபரில் புனரமைப்பு பணி தொடங்கியது. இந்த பணி, 2013 நவம்பர் 26ம் தேதிக்குள் முடிந்து, நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று மேயர் சைதை துரைசாமி 2 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்.

கடந்த மாதம் 26ம் தேதியுடன் ரிப்பன் மாளிகை கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், திட்டமிட்டபடி புனரமைப்பு பணிகள் முடியாததால், விழா கொண்டாடப்படவில்லை. ரிப்பன் மாளிகை 4 ஆண்டுகளில் கட்டி  முடிக்கப்பட்டது. ஆனால், புதுப்பிக்கும் பணி 2009ல் தொடங்கி 4 ஆண்டுகளை தாண்டியும் 50 சதவீதம் கூட முடியவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரிப்பன் மாளிகையின் முழு வரலாறையும் விளக்கும் வகையில், குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்துக்கு ‘நேற்று இன்று நாளை‘ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறும்படத்தை திரையிட அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் வரும் சனிக்கிழமை ரிப்பன் மாளிகையில் குறும்படம் திரையிடப்படும். மேலும், டிவி சேனல்களிலும் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அன்றைய தினம் சிறிய அளவில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 


Page 280 of 3988