Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நெல்லை டவுனில் பூங்காவை சீரமைக்க வேண்டும் மேயரிடம், பொது மக்கள் கோரிக்கை

Print PDF

தினத்தந்தி             04.12.2013

நெல்லை டவுனில் பூங்காவை சீரமைக்க வேண்டும் மேயரிடம், பொது மக்கள் கோரிக்கை

நெல்லை டவுனில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நேற்று பல்வேறு பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை மேயர் விஜிலா சத்தியானந்திடம் கொடுத்தார்கள். நெல்லை டவுன் கோடீசுவரன் நகரை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் மற்றும் பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

பூங்கா சீரமைப்பு

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கோடீசுவரன் நகர் 10–வது குறுக்குத்தெருவில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள சுமார் 7 ஆயிரம் சதுர அடி இடத்தில் கருவேல மரங்களும், புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. இந்த பகுதி விஷப்பாம்புகளின் உறைவிடமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி, பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று கூறிஉள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மேயரிடம் கொடுத்த மனுவில், நெல்லை 41–வது வார்டு நயினார்குளம் தெருவில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர நிரப்பப்படாமல், போதுமான வாறுகால் வசதி இல்லாமல் கழிவுநீர் மழை நீருடன் கலந்து வீதியில் தேங்கி உள்ளது. எனவே இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

சிமெண்டு சாலை

11–வது வார்டு கவுன்சிலர் வசந்தா ஜெகதீசுவரன் கொடுத்த மனுவில், திம்மராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்டு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது பாதி சிமெண்டு சாலையும், மற்றொரு பாதி தார் ரோடும் அமைக்க வேண்டும். இதை தவிர்த்து முழுவதும் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டை சலவையாளர் சமுதாய நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வண்ணார்பேட்டை 9–வது வார்டுக்கு உட்பட்ட தங்கம்மன் கோவில் அப்பர் சுவாமிகள் தெருவில் மாநகராட்சி சார்பில் சிமெண்டு சாலை போடப்பட்டது. அங்கு தனிநபர் ஆக்கிரமிப்பால் சாலை முழுமையாக போடப்படாமல் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோவிலுக்கு செல்லும் ரோட்டை பொது மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

 

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி             04.12.2013

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அரசு அனுமதி இன்றி அமைக்கப்பட்டு இருக்கும் விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மு.கருணாகரன் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

அகற்ற வேண்டும்

நெல்லை மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவுக்கு முரணாகவும், அரசு அனுமதி இன்றியும் தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகளை நிறுவி உள்ளனர். அரசு அனுமதி இன்றி நிறுவப்பட்டு இருக்கும் விளம்பரப் பலகைகளை நாளை 5–ந் தேதி வியாழக்கிழமைக்குள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும்.

இல்லை என்றால் மறுநாள் அதாவது 6–ந் தேதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விளம்பர பலகைகள் அகற்றப்படும். அதற்குரிய செலவுத் தொகையை அந்தந்த நிறுவனத்திடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேதங்களுக்கு..

விளம்பரப் பலகைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், விளம்பரப் பலகைகளின் பொருட்சேதங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. எனவே தனியார் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்து உள்ளார்.

 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் வேலை பார்த்த மேலும் 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Print PDF

மாலை மலர்            04.12.2013

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் வேலை பார்த்த மேலும் 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

சென்னை, டிச. 4 - சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய ஆசிரியர்–ஆசிரியைகள் சிக்கியுள்ளனர்.

10–ம் வகுப்பு, பிளஸ்–2 படித்து விட்டு ஆசிரியர் பயிற்சி படிக்காமலேயே, படித்ததாக போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த போலி ஆசிரியர்கள் மாநகராட்சி பள்ளிகளில் வேலை செய்து பல லட்சம் சம்பளமாக பெற்றுள்ளனர்.

போலி ஆசிரியர்கள் பட்டியலில் முதல் கட்டமாக 8 பேர் இடம் பெற்றனர். அவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போலி ஆசிரியர்களில் 3 பேர் முருகன், ராஜா, குப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் மாநகராட்சி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.மேலும் 5 போலி ஆசிரியர்களை போலீசார் தேடி வந்தனர்.

அவர்கள் தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெற்றனர். இதையடுத்து போலி ஆசிரியர்கள் சத்தியவாணி, எழில்மாறன், சத்தியவேலு, தினகரன், சுகுமாறன், ஆகியோரை இணை ஆணையர் (கல்வி) சஸ்பெண்ட் செய்துள்ளார். இதுவரை மொத்தம் 8 போலி ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் எழில் மாறனும் – சத்தியவாணியும் கணவன்– மனைவி ஆவர்.

போலி சான்றிதழ் கொடுத்து வேலை பார்த்து சம்பளம் பெற்ற இவர்களின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் இதுவரை முறைகேடாக பெற்ற சம்பள பணத்தை திரும்ப பெறுவது குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

8 போலி ஆசிரியர்களும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெற்றுள்ளனர். அந்த பணத்தை முறைப்படி திரும்ப பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி கல்வி அதிகாரி தெரிவித்தார்.

 


Page 281 of 3988