Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

டெங்குவை தடுக்க நடவடிக்கை 300 பேர் கொண்ட குழு அமைப்பு

Print PDF
தினமலர்                04.12.2013

டெங்குவை தடுக்க நடவடிக்கை 300 பேர் கொண்ட குழு அமைப்பு

சேலம்: சேலம் மாநகர பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா உள்ளிட்டவற்றை தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 300 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக சோதனை நடத்தப்படுகிறது.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக, விட்டுவிட்டு பருவ மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், தேங்கிய மழைநீர் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ணம் உள்ளிட்டவைகளால், டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால், மழைக்கால தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாநகராட்சியில், 300 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை மண்டலங்களுக்கு தலா, 75 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, உரிய பயிற்சி வழங்கப்பட்டு, தினக்கூலி அடிப்படையில், இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, வீடு வீடாக சென்று, தேங்கிய மழைநீர் மற்றும் வைரஸ் பரவும் விதம் குறித்தும், வைரஸ் நோயால் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாநகர நல அலுவலர் அர்ஜூன்குமார் கூறியதாவது:

கடந்த ஆண்டில் டெங்கு வைரஸ் கண்டறிந்த இடங்கள், காய்ச்சல் உள்ள பகுதிகள், டெங்கு புழுக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ள இடங்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு, அப்பகுதிகளில், தடுப்புக்குழுவினர் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொசுப்புழு உருவாகாமல் தடுக்க மருந்து தெளிப்பது உள்ளிட்டவற்றை செய்வதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இம்மாதம் முழுவதும் இக்குழுவினர் இப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
 

குடிநீர் குழாயில் உடைப்பு

Print PDF

தினமலர்          02.12.2013

குடிநீர் குழாயில் உடைப்பு

சிதம்பரம் : வ.உ.சி.தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் 5 வார்டுகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் நகராட்சியில் 19வது வார்டு முதல் 23வது வார்டு வரை உள்ள தெருக்களுக்கு மானா சந்து வாட்டர் டேங்கில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகம் குழாய் சரியாக பராமரிக்காததால், குடிநீர் செல்லும் குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வாடிக்கையாக இருந்து வருகிறது.

உடைந்த குழாயைச் சரியாக சீரமைக்காததால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக நகர மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வ.உ.சி தெருவில் குடிநீர் செல்லும் பிரதான குழாயில் திடீரென பழுது ஏற்பட்டு உடைந்து குடிநீர் ஆர்ட்டிஷியன் ஊற்று போல் வெளியேறி தெருக் களில் ஆறாக ஓடியது.

வ.உ.சி.தெருவில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லவில்லை. இதனால் 25க்கும் மேற்பட்டதெருக்களில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. வ.உ.சி. தெரு பகுதி மக்கள் பைப்பு உடைந்து தண்ணீர் வெளியேறிய இடத்தில் தண்ணீர் பிடிக்க குவிந்தனர்.

மானா சந்து வாட்டர் டேங் குடிநீர் விநியோகம் குழாய் சரியான முறையில் பராமரிக்காததால், இது போன்று அடிக்கடி பழுது ஏற்படுவதும், பழுது ஏற்பட்ட இடத்தின் மூலம் மழை நீர் மற்றும் கழிவு நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனால் நகர மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இதனை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

 

கோவையை பின்பற்றுமா திருப்பூர் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை

Print PDF

தினமலர்          02.12.2013

கோவையை பின்பற்றுமா திருப்பூர் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை

பிளாஸ்டிக் கழிவுகளால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், கோவையை பின்பற்றி, 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு முழு தடை விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 550 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 300 டன் வரை மக்காத பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளது. நூறு ஆண்டு களானாலும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால் மண்ணின் தரம் மாறி, மழை நீரை நிலத்துக்குள் இறங்குவதை தடுக்கிறது; நிலத்தடி நீர்மட்ட அளவு அபாய கட்டத்தில் உள்ள திருப்பூரில், இதே நிலை தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில், நிலத்தடி நீரே இருக்காது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

மேலும், சாக்கடை கால் வாய் கள், நீர் நிலைகளில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், கழிவு நீர் செல்ல வழியில்லாமல், அடைத்துக் கொண்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெள்ளசேதம், பிளாஸ்டிக் கழிவு களால் ஏற்பட்டது என்பதை மக்களும், உள்ளாட்சி அமைப்புகளும் இன்னும் உணராமல் உள்ளனர்.

மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக் கும், மனித வாழ்வியலுக்கும் எமனாக உள்ள பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாமலும், திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்த முடியாமலும் உள்ளதோடு, மாநிலத்திலேயே பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமுள்ள நகரமாகவும் திருப்பூர் கண்டறியப்பட்டுள்ளது. 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்ற தடை அமலில் இருந்தாலும், பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கோவை மாநகராட்சியில், ஆர்.எஸ்.,புரம், பூ மார்க்கெட், டி.பி., ரோடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில், வணிக பயன்பாட்டுக்கு , 40 மைக்ரானுக்கு குறைவானது மட்டுமன்றி, அனைத்து வகை பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

உத்தரவை மீறினால் கடை "சீல்' வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பூ மார்க்கெட் , இறைச்சி கடைகளில் இலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேக்கரி, ரோட்டோர கடைகளில், பேப்பர் மற்றும் பேப்பர் டம்ளர், சூடான பொருட்களுக்கு வேதி வினை மாறாத அலுமினியம், சில்வர் கோட்டிங் உள்ள பேப்பர் கவர்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையை விட, பிளாஸ்டிக் எனும் அரக்கனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், அம்முறையை நடைமுறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். கோவை மாநகராட்சி சட்டத்தை பின்பற்றும் திருப்பூர் மாநகராட்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டிலும், கோவையை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் செல்வ ராஜ் கூறுகையில்,""பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்த ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது. மாற்றுபொருள் இல்லா ததால், சிக்கல் ஏற்பட்டது. அதேநேரத்தில், ஏதாவது ஒரு நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. கோவை மாநகராட்சியில், செயல்படுத்தும் திட்டத்தை ஆய்வு செய்து, திருப்பூரிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

எதுவும், சாத்தியமே!

பூக்கடைகள், இறைச்சி கடைகளில் பழைய முறையில் இலையில் வைத்து, பேப்பரில் மடித்து கொடுக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பேக்கரிகளில் காக்கி நிற கவர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அந்நடைமுறையை மீண்டும் செயல்படுத்தினால் போதும். பெரிய வணிக நிறுவனங்களில் சணல், நூல் மற்றும் கெட்டியான பேப்பர் மற்றும் நூல் கலந்த கேரி பேக்குகளை கட்டாயமாக்கலாம். சூடான பொருட்களுக்கு, சில்வர், அலுமினிய கோட்டிங் கவர்களை பயன்படுத்தலாம். மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகள் மனது வைத்தால் நிச்சயம் முடியும். ஒவ்வொரு பகுதியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்தால் போதும்; ஓராண்டில் பிளாஸ்டிக் இல்லாத நகராக திருப்பூரை மாற்றலாம்.

 


Page 282 of 3988