Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வணிக வளாகம் முன் குப்பைத்தொட்டி வைத்து வரி வசூல்: நகராட்சி நூதன நடவடிக்கை

Print PDF

தினமலர்             30.11.2013 

வணிக வளாகம் முன் குப்பைத்தொட்டி வைத்து வரி வசூல்: நகராட்சி நூதன நடவடிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இதில்,பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2,760 வணிக வளாகங்களிலிருந்து 18 லட்சம் ரூபாய் வசூலாகும்.

கடைகளுக்கு ஏற்றவாறு, குறைந்த பட்சம் 123 ரூபாய் முதல் 1,216 ரூபாய் வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வசூலிக்கப்படும். மற்ற வரியினங்கள் 100 சதவீதம் வரை வசூலாகும் நிலையில், தொழில் வரி மட்டும் ஆண்டுதோறும் 25 சதவீதம் மட்டுமே வசூலாகி வருகிறது.

ஒரு சிலர் பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால், இதுவரை 62 லட்சம் ரூபாய் வரை வணிக வளாகங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவையில் உள்ளன. நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் உத்தரவின் பேரில், நகராட்சி வருவாய் அதிகாரிகள் அதிரடியாக தொழில் வரி வசூலிக்க களம் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், கடைவீதியில் பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரிகள் வரி வசூலிக்க களம் இறங்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரி செலுத்துவதாக கடை உரிமையாளர்கள் உறுதியளித்ததால், அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்நிலையில், கோவை ரோட்டில், தனியார் வங்கியின் முன், குப்பைத்தொட்டிகள் வைத்து, அதிகாரிகள் வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் வரும் வழித்தடத்தில், இரண்டு குப்பைத்தொட்டிகள் திடீரென வைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கி அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால், குப்பைத்தொட்டிகளில், கிடக்கும் குப்பை குவியலால், துர்நாற்றம் வீசி வருவதால், வங்கி அதிகாரிகள், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

நகராட்சி தொழில் வரி வசூலிக்க பல நூதன முறைகளை பின்பற்றி வருவது கடை உரிமையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரி பாக்கி அதிகம்: நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,"கோவை ரோட்டில் உள்ள தனியார் வங்கி செயல்படும் கட்டடத்திற்கு உரிமையாளர் வரி செலுத்தவில்லை. 7 லட்சம் ரூபாய் வரி பாக்கியுள்ளது. மேல் கட்டடத்திற்கு அனுமதி பெறவில்லை. பலமுறை தெரிவித்தும் வரி செலுத்தவில்லை. எனவே, தான் அதிரடியாக வணிக வளாகம் முன் குப்பைத்தொட்டிகளை வைத்துள்ளோம்,' என்றனர்.

 

நாசரேத்-குரும்பூர் சாலை சீரமைப்புபணி துவக்கம்

Print PDF

தினகரன்             29.11.2013

நாசரேத்-குரும்பூர் சாலை சீரமைப்புபணி துவக்கம்

நாசரேத்,  தினகரன் செய்தி எதிரொலியாக பலமாதங்களாக குண்டும் குழியுமாக கிடந்த நாசரேத் - குரும்பூர் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாசரேத்  குரும்பூர் இடையே உள்ள ஓய்யான் குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, நெய்விளை, நாலுமாவடி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்பட்டது. இந்த வழியாக ஏரளமான பஸ்கள், லாரி கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகிறது. குறிப் பாக புன்னைநகர் வனதிருப்பதி கோயிலுக்கும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஜெபக்கூடாரத்துக்கும் மாதந்தோறும் ஏராளமான ஸ்பெஷல் பஸ்களும் வேன்களும் மற்றும் கார்களும் சென்று வருகிறார்கள்.

இந்த வழியாக செல்பவர்கள் சிரமப்பட்டனர். இந்த சாலையை விரைவில் சீரமைக்ககோரி கடந்த 24ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தன. இதன் எதிரொலியாக சாலையை அகலப்படுத்தி சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மூக்குப்பீறியில் இருந்தே ரோட்டின் இருபக்கத்திலும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தொண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து நாசரேத் காங்கிரஸ் சிறுபான்மைபிரிவு தலைவர் பீட்டர் கூறியதாவது: நாசரேத்-குரும்பூர் சாலை பல மாதங்களாக மோசமான நிலையில் கிடந்தன. இந்த வழியாக மோட்டார் சைக்கிள்களிலும், சைக்கிள்களிலும் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கடந்த 24 ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வந்த உடனே சாலைப்பணிகள் தொடங்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் இதுகுறித்து நாசரேத்தை சேர்ந்த ஆனந்தராஜ் கூறியதாவது, நாசரேத் குரும்பூர் இடையே சாலைப்பணி தொடங்கப்பட்டுள்ளது இதனை விரைவில் முடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

 

தீபாவளி பட்டாசு கழிவு அதிகரிப்பு மாநகரில் கூடுதலாக 300 டன் குப்பை

Print PDF

தினகரன்             29.11.2013

தீபாவளி பட்டாசு கழிவு அதிகரிப்பு மாநகரில் கூடுதலாக 300 டன் குப்பை

திருப்பூர், : திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் பட்டாசு கழிவுகள் உட்பட 300 டன் அளவுக்கு குப்பைகள் அதிகளவில் சேகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல லட்சம் மக்கள் வசித்து வரும் திருப்பூர் மாநகரில், நாளொன்றுக்கு 28280 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள்தெரிவிக்கின்றன. 60 வார்டுகளிலும் 831 துப்புரவு ஊழியர்களை கொண்டு குப்பைகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தீபாவளி பண்டிகையையொட்டி, லட்சக்கணக்கான பொதுமக்கள் வெளியூர் சென்று விட்டநிலையில், கடந்த 3 நாளில் குப்பைகளின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குப்பைகளின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

 தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் பட்டாசு மற்றும் இதர குப்பை கழிவுகளின் அளவு மிக அதிகமாக இருந்ததாக கூறுகின்றனர்.அவர்கள் கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகரில் தினமும் 28280 டன்னுக்கு குறையாமல் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 3 நாட்களில் இதன் அளவு கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 6280 டன் குப்பை அள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பட்டாசு குப்பை என மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை தலா 100 டன் அடிப்படையில் கிட்டத்தட்ட 300 டன் குப்பை அதிகரித்துள்ளதாகவும் கடந்தாண்டை விட தீபாவளி பட்டாசு கழிவுகளின் அளவு இந்தாண்டு அதிகம் எனவும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே மழை எச்சரிக்கை காரணமாக மாநகரில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனுக்குடன அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சாக்கடை கால்வாய் அடைக்கப்படாத வகையில் பட்டாசு கழிவுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.

 அதன்படி மாநகர் முழுவதும் குப்பைகள் அள்ளும் பணி கடந்த இரு தினங்களாக தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தீபாவளி விடுமுறை காரணமாக சில பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடந்தது.

 


Page 287 of 3988