Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி தொழில்வரி, தொழில் உரிம கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம்

Print PDF

தினமணி             29.11.2013

மாநகராட்சி தொழில்வரி, தொழில் உரிம கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம்

தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கட்டடங்களுக்குமான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி அமலில் உள்ளது.

பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி உரிய காலத்தில் நிலுவையின்றி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணங்களைச் செலுத்தலாம்.

நகரில் உள்ள பல்வேறு கட்டடங்களின் உரிமையாளர்கள் சுயமதிப்பீட்டுப் படிவம் சமர்ப்பிக்கப்படாமலும், கட்டட உபயோகத்திற்கு ஏற்றவாறு சொத்துவரி நிர்ணயம் செய்யாமலும் இருந்து வருகின்றனர்.

கள ஆய்வில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் உபயோக மாற்றப்பட்டுள்ள கட்டடங்கள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக குடிநீர் இணைப்புத் துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, நிலுவைத் தொகையினை உடனடியாகச் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையைத் தவிர்க்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.

 

தமிழக நகரங்களில் உலகத் தரத்தில் சாலைகள் அமைக்கத் திட்டமிட வேண்டும்'

Print PDF

தினமணி             29.11.2013

தமிழக நகரங்களில் உலகத் தரத்தில் சாலைகள் அமைக்கத் திட்டமிட வேண்டும்'

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உலகத் தரத்திலான சாலைகள் அமைக்கத் திட்டமிட வேண்டும் என்று, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் க.பனீந்திர ரெட்டி தெரிவித்தார்.

கோவையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கான இரண்டு நாள் கலந்தாய்வுக் கூட்டத்தை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் க.பனீந்திரரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது:

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதியில் உள்ள சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், எதிர்கால போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் சாலை வடிவமைப்பைத் திருத்தியமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும.

இதற்காக நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட போக்குவரத்து மற்றும்  வளர்ச்சித் திட்ட நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி வளர்ந்துவரும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலுள்ள அனைத்து முக்கிய சாலைகளும் உலக தரத்தில் அமைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் போக்குவரத்து வசதிகளை ஊக்கப்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகள் வருங்காலங்களில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இதற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓவ்வொரு சாலையிலும் நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக நடைபாதைகளில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.

நகரின் சுற்றுச்சூழல் காத்திட பொதுப் போக்குவரத்து வசதிக்கு அதிகமான அளவு திட்டமிட வேண்டும்.  தனியார்  வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு சாலையிலும் பாதசாரிகள் நடைபாதையைப் பயன்படுத்துவதற்கும், எரிபொருள் பயன்பாடு இல்லாத வாகனங்களைப் பயன்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் நடைபாதை வசதிகள் தேவையான அளவு செய்யப்பட்ட பிறகே வாகனம் நிறுத்துமிடங்களுக்கு இட ஓதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த வசதிகள் உலகத் தரத்தில் ஒவ்வொரு சாலையிலும் அமைந்திட தற்போதுள்ள சாலை வடிவமைப்புகளைத் திருத்தி அமைத்திட வேண்டும்.

இதற்கு போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்ட நிறுவனம் தெரிவிக்கும் நடைமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி சாலைகளை மேம்படுத்திட இந்தக் கூட்டம் உதவும் என்றார்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் கொலம்பியா நாட்டின் போகோட்டோ மாநகர முன்னாள் மேயர் என்ரிக் பெனோல்சா கலந்துகொண்டார். இவர் மாநகர மேயராகப் பணியாற்றியபோது போக்குவரத்தை முதன்மையாகக் கொண்டு தனிக்கவனம் செலுத்தி சாலைப் போக்குவரத்தில் உலக அளவில் முதன்மை மாநகரமாக உருவாக்கிய திட்டங்கள் குறித்தும் விளக்கப்படங்கள் மூலம் விரிவுரையாற்றினார்.

நிதி மேலாண்மை நிறுவன முதுநிலை ஆலோசகர் கே.உஷாராவ், போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்ட  நிறுவனத்தின் ஆலோசகர்கள் ஷ்ரேயா, கிரிஷ், ஜமாய் மற்றும் நகராட்சிகள் நிர்வாக இயக்குனரகத்தின் இணை இயக்குநர் (நிர்வாகம்)

செபாஸ்டின் ஆகியோர் நகரப் பகுதிகளில் சாலை மற்றும் போக்குவரத்து  மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து கருத்துரை வழங்கினர்.

கோவை மாநகராட்சி ஆணையர் க.லதா, மதுரை மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுமதி, கோவை மாநகராட்சி துணை ஆணையர் சு.சிவராசு மற்றும் 9 மாநகராட்சி, 125 நகராட்சிகளின் ஆணையர்களும், பொறியாளர்களும், அனைத்து நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.

 

ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க எதிர்ப்பு

Print PDF

தினமணி             29.11.2013

ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட, பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க அனுமதி வழங்குவதற்கு பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  

 மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி தெய்வேந்திரன், செயல் அலுவலர் அமானுல்லா, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

கவுன்சிலர் முனியசாமி: பேரூராட்சி பகுதியில் இறைச்சிக்காக அறுக்கப்படும் ஆடுகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைக்க வேண்டும்.

  தேவர்சிலை பகுதியில் புதிதாக மின்கம்பங்கள் நடப்படும்போது பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இனி வரும் காலங்களில் இப் பிரச்னை மேலும் தீவிரமாகும். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகையாற்றுக்குள் ஆனந்தவல்லி அம்மன் கோயில் முதல் சோணையாசுவாமி கோயில் வரை மின்விளக்கு வசதி செய்யப்பட வேண்டும்.

கவுன்சிலர் சந்திரசேகரன்: நகரில் பல இடங்களில் மின்விளக்குகள் எரியாத நிலை உள்ளது. இவற்றை சரி செய்து நகரில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

  தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து பேசினர்.

 கடந்த ஜூலை மாதம் டி.எஸ்.பி வெள்ளத்துரை முன்னிலையில் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, பேரூராட்சி இடத்தில் இருந்த கடைகளும் அகற்றப்பட்டன. இந் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடை வைக்க அனுமதி கேட்டு வரப்பெற்ற விண்ணப்பம் குறித்து கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இத் தீர்மானத்துக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இத் தீர்மானம் குறித்து பேசிய கவுன்சிலர்கள் முனியசாமி, பாரிவள்ளல், சரவணன், மோகன்தாஸ் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகள் வைக்க பேரூராட்சி அனுமதி வழங்கக்கூடாது. அனுமதி வழங்கினால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது. மேலும் ஏராளமானோர் மீண்டும் பேரூராட்சி இடங்களை ஆக்கிரமித்து கடைகளை வைப்பார்கள் என்றனர். இதையடுத்து இத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மேலும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் மற்றும் செயல் அலுவலர் பதிலளித்துப் பேசுகையில் நகரில் நிலவும் குடிநீர் பிரச் னைக்கு மழை பெய்து குடிநீர் திட்டத்தில் நீர் ஆதாரம் கிடைத்தால் மட்டுமே தீர்வு  கிடைக்கும் என்றனர். அதன்பின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 290 of 3988