Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

1989க்கு பின் உருவான மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்! வீடு கட்ட திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி

Print PDF

தினமலர்          05.01.2015

1989க்கு பின் உருவான மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்! வீடு கட்ட திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி


சென்னை பெருநகர் பகுதிகளில், கடந்த, 1989ம் ஆண்டுக்கு பின், பிரிக்கப்பட்ட மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு கட்ட நினைப்பவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

சென்னை பெருநகர் பகுதியில், கடந்த, 1989, டிச., 31ம் தேதிக்கு முன், உருவான அங்கீகாரமற்ற மனைகள், மனை உட்பிரிவுகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, 1992ம் ஆண்டு சி.எம்.டி.ஏ., அறிவித்தது. அதன்படி, ஆயிரக்கணக்கான மனைகள் வரன்முறை செய்யப்பட்டன. முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு, பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு, புதிய மனைப்பிரிவுகளுக்கான அங்கீகாரங்களை, சி.எம்.டி.ஏ., வழங்கி வருகிறது.

குழப்பம் : ஆனால், பெரிய அளவில் அதிக பரப்பளவை கொண்ட புதிய மனைப்பிரிவு திட்டங்களுக்கு மட்டுமே, இத்தகைய அங்கீகாரம் கிடைக்கிறது. அதில், ஒரு குடும்பத்தில் தலைவருக்கு சொந்தமாக, இரண்டு அல்லது மூன்று கிரவுண்ட் நிலங்கள் இருந்து, அது அவர் காலத்துக்கு பின் வாரிசுகளால் பிரிக்கப்பட்டால், இத்தகைய பிரிப்புகள், முறையான மனைப்பிரிவாக அங்கீகாரம் பெற வேண்டும். ஒரு கிரவுண்ட் அளவுக்கான நிலத்துக்கு, அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய மனைகள் அங்கீகாரம் கோரி வந்தால், அதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான, முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால், குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக, இத்தகைய சிறிய மனைகளுக்கு, தனியாக அங்கீகாரம் கேட்டு விண்ணப்பங்கள் வந்தால், அந்த நிலம் தொடர்பாக, கடந்த, 1989ம் ஆண்டுக்கு முந்தைய, ஆவண பதிவை கணக்கில் எடுத்துக் கொண்டு, வரன்முறை திட்டத்தில் சேர்த்து விடுகின்றனர்.இதனால், தனிப்பட்ட மனைகளில் வீடு கட்டுவோருக்கு, கூடுதல் செலவு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

காரணம் என்ன?
பெயர் குறிப்பிட விரும்பாத, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: கடந்த, 1989ம் ஆண்டுக்கு பின், உருவான புதிய மனைகளை முறைப்படுத்துவதில் குழப்பம் நிலவுகிறது. அதற்கான முறையான விதிகள் இருப்பதாக, நகரமைப்பு துறையினர் கூறினாலும், உள்ளாட்சி அமைப்புகள் மத்தியில், நிலையில் இது விஷயத்தில் குழப்பம் நிலவுகிறது.எனவே, 1989ம் ஆண்டுக்கு பின் உருவான அனைத்து மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான திட்டத்தை, அரசு செயல்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
 

ரிப்பன் மாளிகையில் பூத்து குலுங்கும் 28 வகையான மரங்கள் நட திட்டம்

Print PDF

தினமலர்       05.01.2015

ரிப்பன் மாளிகையில் பூத்து குலுங்கும் 28 வகையான மரங்கள் நட திட்டம்

 

சென்னை : ரிப்பன் மாளிகை வளாகத்தில், பூத்து குலுங்கும் 28 வகையான மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகம் 11.4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது ரிப்பன் மாளிகை, இணைப்பு கட்டடங்கள், நான்கு தளங்கள் கொண்ட புதிய இணைப்பு கட்டடம், விக்டோரியா மாளிகை ஆகியவை இந்த வளாகத்தில் உள்ளன.அதில், புதிய கட்டடம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா மாளிகை ஆகிய மூன்றை தவிர, மற்ற அனைத்து இணை கட்டடங்களையும் இடித்து தள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த இடங்களை பசுமையாக வும், பொதுமக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வில்வம், புன்னை, வேம்பு, பவளமல்லி, நாகலிங்கம், வென்நாகு, வெள்ளைகுடம்பா, நிலத்திருவட்டி, மருதமரம், புங்கமரம், ஆலமரம், பளசுமரம், இளவமரம், அரசமரம், மூங்கில் மரம், செண்பகம், சந்தனம், தென்னை, வாழை, நெல்லி, பச்சிளை, அசோகம், இளந்தை, நாவல், மாமரம், கல்யாண முருங்கை உட்பட 28 வகையான மரங்கள், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடவு செய்ய வடிவமைப்பு தரப்பட்டு உள்ளது.இந்த மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மாதங்களில் பூத்துகுலுங்கும். இந்த அனைத்து வகை மரங்களையும் வளாகத்தில் நடுவதன் மூலம், ஆண்டு முழுவதும் பூத்து குலுங்கும் இயற்கை எழிலுடன், ரிப்பன் மாளிகை வளாகம் பசுமையாக இருக்கும். தற்போது வளாகத்தில் 156 மரங்கள் உள்ளன. அவை அப்படியே பராமரிக்கப்படும். புதிதாக எவ்வளவு மரங்களை நடுவது என இறுதி செய்யவில்லை.

விக்டோரியா மாளிகையை ஒட்டி 2,000 கார்களை நிறுத்தும், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கான உணவகம், பூங்கா தனியேஏற்படுத்தப்படும்.மதிப்பீடுகள் விரைவில் தயார் செய்யப்பட உள்ளன. மெட்ரோ ரயில் நிர்வாகம் ரிப்பன் மாளிகையின் முன்புறமும், விக்டோரியா மாளிகை பகுதியிலும் பணி மேற்கொண்டுள்ளது.வரும் ஜூலையில், இந்த இடங்களில் பணி முடித்து, மாநகராட்சி நிலத்தை திரும்ப தருவதாக அந்நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. நிலம் கைக்கு வந்ததும், உலகத்தர பூங்கா அமைக்கும் பணிகளை துவங்கும் வண்ணம், ஒப்பந்தம் கோரி, தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

 

சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த 300 கையடக்க இயந்திரங்கள் கொள்முதல்

Print PDF

தினமலர்          05.01.2015

சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த 300 கையடக்க இயந்திரங்கள் கொள்முதல்

சென்னை : சொத்து வரி வசூலை தீவிரப்படுத்தும் வகையில், 300 கையடக்க இயந்திரங்களை, சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளில் சொத்து வரி வசூலிக்கும் பணியில், 274 வரி வசூலிப்பாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பு மையங்கள், வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.வரி வசூலிப்பாளர்கள் நேரடியாக சென்று, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வசூல் செய்ய வசதியாக, கையடக்க கருவிகள் வழங்கப்பட்டன.அவை அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. அவற்றை சரிசெய்ய முடியாத நிலையில், தற்போது, 300 புதிய கையடக்க கருவிகளை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.

அதில், 274 கருவிகள், வரி வசூலிப்பாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள கருவிகள், தேவைக்காக இருப்பு வைக்கப்பட உள்ளன. அனைத்து கருவிகளிலும், சொத்துவரி சம்பந்தமான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. புதிய கருவிகள் வழங்கப்பட உள்ளதால், இந்த நிதியாண்டில், சென்னை மாநகராட்சி சொத்துவரி வசூலிப்பில், 600 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Page 30 of 3988