Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி தீவிரம்

Print PDF

தினமணி             29.11.2013

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி தீவிரம்

திருவள்ளூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் பாதிக்கப்படும் வியாபாரிகள், மூலக்காரணமான பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் நிறுவனங்களை

தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இது குறித்து அனைத்துக் கூட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி வருகிறார். அவர் செல்லும் இடங்களிலும் சாலையோரக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தும் வருகிறார். மேலும் திருவள்ளூர் நகராட்சியில் சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கடைகளுக்குச் சென்று அவ்வப்போது பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் வியாழக்கிழமை காலையில் சைக்கிளில் பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் சென்று சாலையோரக் கடைகளுக்கு விநியோகிக்கும் நபரிடமிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் பஜார் வீதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, 200 கிலோ வரை பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ரூ.3 ஆயிரத்து 500 வரை அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் கூறியது: மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அவ்வப்போது ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றோம்.  அந்த அபராத தொகைக்கேற்ப, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்ட துணிப்பைகளை வியாபாரிகளிடம் வழங்குகிறோம். சிறிய பை ரூ. 10, பெரிய பை ரூ.15 எனக் கணக்கிட்டு வியாபாரிகளுக்கு வழங்குகிறோம்.

இந்த ஆண்டு மட்டும், இதுவரை 5 டன் வரை பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துள்ளோம் என்றார்.

வியாபாரிகள் கோரிக்கை: மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளையே அதிகளவில் கேட்டு வாங்குகின்றனர்.

ஒரு வியாபாரி பிளாஸ்டிக் பை விற்பனையை நிறுத்தினால் மற்றொரு வியாபாரி ரகசியமாக விற்பனை செய்கிறார்.

இதனைப் பார்க்கும் மற்ற வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யத் தொடங்கி விடுகின்றனர்.

இதற்கு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டுமெனில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதிகளில் ஆய்வு செய்து அங்கு பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மாவட்டத்துக்குள் பிளாஸ்டிக் பைகளை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் திருவள்ளூர் பஜாரில் பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாக ஒழியும் என்றனர்.

 

"டெங்கு' பாதிப்புள்ள பகுதிகளுக்கும் இலவச கொசுவலை

Print PDF

தினமணி             29.11.2013

"டெங்கு' பாதிப்புள்ள பகுதிகளுக்கும் இலவச கொசுவலை

சென்னை மாநகராட்சியில் டெங்கு, மலேரியா அதிகம் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் நீர்வழிப்பாதைகளின் ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 5 லட்சம் இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொசு வலைகள் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யவும், இரண்டாம் கட்டமாக 4,21,816 கொசு வலைகள் கொள்முதல் செய்யவும் இரண்டு முறை டெண்டர்கள் கோரப்பட்டன.

இதில் 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, வலைகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 4 பேருக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டன.

குடிசை மாற்று வாரிய பகுதிகள்: இந்த நிலையில் நீர் வழிப்பாதை ஓரங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் ஏழைகளுக்கும் கொசு வலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகள், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வலைகள் வழங்கப்படும். மேலும், சென்னையில் கடந்த காலங்களில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் பாதித்த பகுதிகளைக் கண்டறிந்து, அந்த பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கும் இலவச கொசு வலைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கணக்கெடுப்பு முடிந்து கொசு வலைகள் விநியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்போது வழங்கப்படும்: கொசு வலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் முறைப்படி தொடங்கி வைத்திருந்தாலும், கொசு வலைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. கொள்முதல் செய்யப்பட்டுள்ள கொசு வலைகள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இப்போது பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. கொசு வலைகளை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 அல்லது 5 நாள்களில், டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் கொசு வலைகள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்படும். இந்த கொசு வலைகள் ரூ. 1.17 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கொசு வலைகள் கூடிய விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

மாலை மலர்            28.11.2013

மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
 
மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, நவ. 28 - சென்னை நகரின் தண்ணீர் தேவையில், நிலத்தடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை குடிநீரின் தேவைக்கு ஏரிகளில் தண்ணீர் சேகரித்து பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் வாரியம் இத்தண்ணீரை குழாய் மூலமும், லாரிகளிலும் சப்ளை செய்கிறது.

வீட்டு தேவைகளுக்கு வீட்டுக்கு வீடு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. மழைநீரை முறைப்படி சேமிக்காவிட்டால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால் நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே தமிழக அரசு மழைநீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மழைநீர் சேமிப்பை அதிகரிப்பது குறித்து சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் சென்னை நகரிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இருக்கும் சிறிய நீர்நிலைகள், குட்டைகளை புதுப்பித்து மழைநீரை வீணாக்காமல் சேமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 429 சதுர கிலோமீட்டர் பகுதியில் மழை நீர் சேமிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை பகுதியில் 100–க்கும் மேலான சிறிய குட்டைகள் உள்ளது. இதில் 19 குட்டைகளை குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்க உள்ளது. மீதம் உள்ள மழைநீர் சேமிப்பு பகுதிகளை சென்னை மாநகராட்சி புதுப்பிக்க முடிவு செய்து இருக்கிறது.

மாநகராட்சி பகுதியில் எங்கெல்லாம் மழைநீர் சேமிப்பு குட்டைகள் அமைக்கலாம். மழைநீரை வீணாகாமல் ஒரு பகுதியில் சேமித்து வைக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மழைநீர் சிறிய குட்டைகளில் சேமிக்கப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான காலி நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தால் அதை மீட்டு மழைநீரை சேமிக்க பயன் படுத்துவது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.

அம்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மங்கள் ஏரியில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதுவும் சீரமைக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை பகுதியிலும் நிலத்தடி நீர் உயர வாய்ப்பு உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது போன்ற சிறு ஏரிகளுக்கு மழைநீர் வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மழைநீர் வரும் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன.

இவைதவிர, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேமிப்பு வசதிகளை சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு கட்டாயம் மழை சேமிப்பு வசதி அமைக்க வேண்டும் என்பதிலும், சென்னை மாநகராட்சி தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


Page 291 of 3988