Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் மாற்றம் மாநகராட்சி புதிய ஆணையர் நடவடிக்கை

Print PDF

தினகரன்            22.11.2013

மார்க்கெட் கண்காணிப்பாளர்கள்  மாற்றம் மாநகராட்சி புதிய ஆணையர் நடவடிக்கை

மதுரை, :  மாநகராட்சி புதிய ஆணையர் தனது முதல் நடவடிக்கையாக ரிங்ரோடு, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட்டுகளை கவனித்து வந்த மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் 4 பேரையும் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சி புதிய ஆணையராக கிரண் குராலா நேற்று முன்தினம் பொறுப்பேற்றதும், “நேர்மையான நிர்வாகமாக இருக்கும்“ என்றார். இதனால் மாநகராட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி முதல் நடவடிக்கையாக 4 மண்டலங்களின் மார்க்கெட் கண்காணிப்பாளர்களையும் அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சியில் மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் என ஒரு பணியிடமே கிடையாது. இந்த பணியை இளநிலை உதவியாளர் கிரேடு ஊழியர்கள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் வரியில்லா இனங்கள் என்று சொல்லப்படும் வருவாய் தரும் இனங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ரிங்ரோட்டிலுள்ள வாகன சுங்க சாவடி, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் மார்க்கெட் மற்றும் அனைத்து வகை மார்க்கெட், மாநகராட்சி கடைகளுக்கு வாடகை வசூலித்தல் போன்ற முக்கிய பொறுப்புகள் இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இது, மாநகராட்சிக்கு வருவாய் தேடித் தரும் பணிகளில் முக்கியமானதாகும். அனுமதி பெறாத கடையாக இருந்தாலும் இவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது.

இதுவரை மார்க்கெட் கண்காணிப்பாளர் பணியில் சையதுமைதீன் (மேற்கு மண்டலம்), தேவ தாஸ் (வடக்கு மண்டலம்), பாலசந்திரன் (கிழக்கு மண்டலம்), செல்வராஜ் (தெற்கு மண்டலம்) இருந்தனர். இவர்கள் தங்களது பொறுப்புகளை, அந்த மண்டலத்திலுள்ள உதவி வருவாய் அலுவலரிடம் (ஏஆர்ஓ) உடனடியாக ஒப்படைக்கும்படி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 4 பேரும் ஏற்கனவே பணியாற்றி வந்த இளநிலை உதவியாளராக மீண்டும் திரும்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட் கண்காணிப்பாளர் பணியை உருவாக்கி, அந்த பணி கீழ் நிலை ஊழியர்களிடம்  ஒப்படைக்கப்பட்டு இருந்ததால், உடனடியாக அதில் மாற்றம் செய்து புதிய ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மேலும் சிறப்பான நிர்வாக சீர்திருத்தங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க, மேயர் ராஜன்செல்லப்பாவும் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி மன்ற கூட்டம் முடிந்ததும் மாலையில் முதல் நிலை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆணையர் ஆய்வு நடத்தினார். தவறுகளை தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் அளவில் மேலும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது, இதனால் ஏற்கனவே புகாரில் சிக்கிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வசூல் வேட்டை

மதுரை நகர் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள், மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றுவதற்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அகற்றப்படவில்லை. இதுபோன்ற பெட்டிக்கடைகள் பெருகியதற்கு, பணம் வசூலித்து கண்டுகொள்ளாமல் இருந்த 4 சந்தை கண்காணிப்பாளர்களே காரணம் என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் சாலை ஓரங்களில் உள்ள இளநீர் கடை, கரும்பு ஜுஸ் கடை, வடை கடைகளிலும், அனுமதி இல்லாமல் வைத்திருந்ததாக கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார் உள்ளது.

 

இணையதளம் மூலமாக தொழில் வரி செலுத்தும் திட்டம் அறிமுகம்

Print PDF

தினமணி          21.11.2013

இணையதளம் மூலமாக தொழில் வரி செலுத்தும் திட்டம் அறிமுகம்

கோவை மாநகராட்சி சார்பில் இணையதளம் வழியாக தொழில் வரி மற்றும் தொழில் உரிமக் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ccmc.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.  அவ்வாறு பதிவு செய்யும் பொது மக்களுக்கு பயனீட்டாளர் பெயர் மற்றும் ரகசியக் குறியீடு ஆகியவை குறுஞ்செய்தியாக வழங்கப்படும். இதில், ஏற்கெனவே வரி செலுத்துபவர்கள் தங்களது பழைய வரி விதிப்பு எண் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

 தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் விவரங்களை தனித்தனியாகப் பதிவு செய்வதன் மூலமாக தொழில் வரி செலுத்த முடியும். இதில், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் அடையாள எண்ணுடன், மொத்த வருமானத்துக்கு ஏற்றாற் போல் தொழில் வரியைக் கணக்கிட்டுச் செலுத்த வேண்டிய தொகை கணினி வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

 கடன் அட்டைகள் மூலமாகவும் தொழில் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக முந்தைய ஆண்டின் நிலுவைத் தொகையையும் செலுத்த முடியும். இதே போல, தொழில் உரிமக் கட்டணத்தையும் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

இலவச கொசுவலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினபூமி         21.11.2013

இலவச கொசுவலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் 

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Free-Mosquito-Net-CM-Inagurate(C).jpg 

சென்னை, நவ.21 - 5 லட்சம் பேருக்கு விலையில்லாக்  கொசுவலை வழங்கும் திட்டத்தை முதல்_அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:_

சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித் தடங்களின் கரைகள் அவைகளை யொட்டிய சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கொசுத் தொல்லையினைத் தவிர்க்கவும், கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 ரூபாய் செலவில் 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை நேற்று  வழங்கினார்.

முதலமைச்சரின் 64வது பிறந்த தினத்தை சென்னை மாநகரின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதல் தடுக்கும் நாளாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு கடந்த 24.2.2012 அன்று சென்னை மாநகரம் முழுவதும் மாணவ, மாணவியர் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அன்றைய தினமே சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 64 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, முதல்_அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடிட சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் 29.08.2013 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் பிறந்த தினத்தன்று சென்னை மாநகராட்சி மூலமாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன்படி, பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் 'நீஏ' சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்; சென்னை மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்திட பொதுமக்களுக்கு 5.5 லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச்செடி கன்றுகள் வழங்கும் திட்டம்; ஆகியவற்றைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்_அமைச்சர் ஜெயலலிதா நேற்று  பப்பாளி மரக்கன்றுகள் மற்றும் நொச்சிச் செடி கன்றுகளை வழங்கினார்.

சென்னையிலுள்ள படித்த ஏழை எளிய பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக, சென்னை மாநகராட்சியால் முதற்கட்டமாக 710 ஏழை எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கும் வகையில் சைதாப்பேட்டையிலுள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் பெரம்பூர் பந்தர் கார்டனிலுள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரண்டு பயிற்சி மையங்களை முதல்_ அமைச்சர் ஜெயலலிதாநேற்று   

 தொடங்கி வைத்து, 4 நபர்களுக்கு சேர்க்கை கடிதங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 305 of 3988