Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் மேயர் ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் மேயர் ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு ஆட்டோ மற்றும் வாடகை கார்களுக்கான முன்பதிவு மையத்தை நேற்று மேயர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

வாகன நெரிசல்

மதுரை மாட்டுதாவனி பஸ் நிலையத்தில் ஆட்டோ மற்றும் கார்களை ஒழுங்குபடுத்தி பஸ் நிலையத்தில் போக்குவரத்தை சீராக்குவதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் ஆட்டோ–கார்களின் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டது.

அதை மேயர் ராஜன்செல்லப்பா நேற்று திறந்து வைத்து பேசினார்.

முன்பதிவு மையம்

அப்போது ராஜன்செல்லப்பா கூறியதாவது:–

மாட்டுதாவனியில் பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது முதற்கட்டமாக 90 ஆட்டோக்களும் 25 கார்களும் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து இருக்கின்றனர்.

அரசு கட்டணத்தை முறைபடுத்ததால் அவர்களே குறிப்பிட்ட கட்டணங்களை வசூலிக்கின்றனர். பொதுமக்கள் இந்த ஆட்டோ–கார் முன்பதிவில் பயணிக்கும்போது அந்த குறிப்பிட்ட கார் அல்லது ஆட்டோ நம்பர், டிரைவரின் பெயர் போன்ற முழுத்தகவல்களும் அச்சிட்டுத்தரப்படுகிறது.

இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கமிஷனர் கிரண்குராலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

நான்கு சாலைகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அரசு ஒப்புதல் ரூ.79.55 கோடி மதிப்பில் பணிகள் விரைவில் துவக்கம்

Print PDF

தினமலர்           21.11.2013

நான்கு சாலைகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அரசு ஒப்புதல் ரூ.79.55 கோடி மதிப்பில் பணிகள் விரைவில் துவக்கம்

சென்னை:சென்னையில் நான்கு முக்கிய சாலைகளை உலக தரத்திற்கு மேம்படுத்தும் திட்டத்திற்கு, 79.55 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அந்த பணிகளுக்கு சென்னை மாநகராட்சி விரைவில் ஒப்பந்தம் கோர உள்ளது.

சென்னையில், 31 சாலைகள் உலக தரத்தில் மேம்படுத்தப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. கோரிக்கை ஏற்பு இந்த திட்டத்தின் முதல்கட்டமாக நான்கு சாலைகளில் பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் (டுபிசல்) மூலம், தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதன்படி டாக்டர் அம்பேத்கர் சாலை (0.6கி.மீ.,), அசோக் நகர் 4வது நிழற்சாலை (1.25கி.மீ.,), அசோக் நகர் முதலாவது நிழற்சாலை (0.3கி.மீ.,), அசோக்நகர் 11வது நிழற்சாலை (1கி.மீ.,) ஆகிய நான்கு சாலைகள் இந்த திட்டத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த சாலைகளில் குடிநீர், கழிவுநீர் குழாய்கள், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் கேபிள்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், குடிநீர், கழிவுநீர் குழாய்கள், மின்சாரம் மற்றும் பி.எஸ்.என்.எல்., கேபிள்களை மாற்றியமைக்க ஆகும் செலவுகளை திட்ட மதிப்பீட்டில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை மாநகராட்சி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்த பணிகளுக்கான இறுதி விரிவான திட்ட அறிக்கை, 2012-13ம் ஆண்டின் ஒப்பந்தப்புள்ளி விலை நிலவரப்படி தயாரிக்கப்பட்டது.

சாலை பணிகளுக்கு 51.32 கோடி ரூபாயும், குடிநீர் வாரிய குழாய்களை மாற்றியமைக்க 17.77 கோடி ரூபாயும், மின்சார கேபிள்களை மாற்றியமைக்க 6.5 கோடி ரூபாயும், பி.எஸ்.என்.எல்., கேபிள்களை மாற்றியமைக்க 3.96 கோடி ரூபாயும் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.

மொத்தம் 79.55 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உலக தர சாலைகள் திட்டத்திற்கு, கடந்த ஜூன் மாதம் அரசின் நிர்வாக அனுமதி கோரப்பட்டது. தற்போது அரசு இந்த திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நான்கு சாலைகளும் தரமான கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும். சாலையின் இருபகுதிகளிலும், 10 அடி அகலத்திற்கு நடைபாதைகள், கிரானைட் மூலம் அமைக்கப்படும்.

௪௫ மரங்கள்

அசோக் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைவதால், சைக்கிள் பாதை தனியாக அமைக்கப்படும். இந்த நான்கு சாலைகளில் மட்டும் 450 மரங்கள் வரை நடப்படும்.

பொதுமக்கள் அமர இருக்கை வசதி செய்யப்படும். மின்மாற்றிகள் தரைமட்டத்தில் இருந்து 5மீ., உயரத்தில் அமைக்கப்படும்.

குடிநீர் குழாய்கள் உட்பட அனைத்தும் மீண்டும் தோண்டத் தேவைப்படாதபடி திட்டமிட்டு சாலையோரம் பொருத்தப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நான்கு சாலைகளில் இந்த நிதியாண்டில் பணிகள் துவங்கும் நிலையில், மற்ற சாலைகளில் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

குடிநீர் குழாய்கள் உட்பட அனைத்தும் மீண்டும் தோண்டத் தேவைப்படாதபடி திட்டமிட்டு சாலையோரம் பொருத்தப்படும்.

 

அரசு பொது மருத்துவமனையில் 'அம்மா உணவகம்' திறப்பு முதல் நாளில், 2,600 பேர் சாப்பிட்டனர்; பிற இடங்களிலும் துவங்க வலியுறுத்தல்

Print PDF

தினமலர்           21.11.2013

அரசு பொது மருத்துவமனையில் 'அம்மா உணவகம்' திறப்பு முதல் நாளில், 2,600 பேர் சாப்பிட்டனர்; பிற இடங்களிலும் துவங்க வலியுறுத்தல்

சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை, அரசு பொது மருத்துவமனையில், 'அம்மா உணவகம்' நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளில், 2,600 பேர், நீண்ட வரிசையில் காத்து நின்று, உணவை ருசித்தனர். மற்ற மருத்துவமனைகளிலும், அம்மா உணவகத்தைத் துவங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், 'அம்மா உணவகம்' திறக்கப்பட்டுள்ளன.

வரவேற்பு

ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், மூன்று ரூபாய்க்கு தயிர்சாதம், ஒரு ரூபாய்க்கு இட்லியும் தரப்படுகிறது. குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபோன்று, அரசு மருத்துவமனைகளிலும் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையேற்ற தமிழக அரசு, 'சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள் உட்பட, ஏழு மருத்துவமனைகளிலும், மாநகராட்சி மூலம், 'அம்மா உணவகம்' திறக்கப்படும்' என, அறிவித்தது.

சாய்வு தளம்

முதற்கட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், 'அம்மா உணவகம்' பிரமாண்டமாக, 5,100 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 300 பேர் சாப்பிட முடியும்.

மாற்றுத்திறனாளிகள், எளிதாக வந்து செல்லும் வகையில், சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தை, முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேற்று திறந்து வைத்தார். முதல் நாளான நேற்று, மருத்துவமனைக்கு வந்த மக்கள், நீண்ட வரிசையில் நின்று, உணவுகளை வாங்கி ருசித்தனர். முதல் நாள் என்பதால், கேசரி இலவசமாக தரப்பட்டது.

அதிகாரிகள் கூறியதாவது:

அம்மா உணவகங்களில், தினமும், 1,500 இட்லி; 400 பொங்கல்; 500 சாம்பார் சாதம்; 300 தயிர் சாதம் விற்கப்படுகிறது. அரசு பொது மருத்துவமனையில் நேற்று ஒரு நாளில், 1,519 சாம்பார் சாதமும், 1,085 தயிர் சாதமும் விற்பனையானது.

மொத்தம், 2,600 பேர் வரை சாப்பிட்டுள்ளனர். வரும் நாட்களில், பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

'காலையில் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட இட்லி, இலவசமாக தரப்பட்டது; விற்பனை செய்யப்படவில்லை' என, ஊழியர்கள் தெரிவித்தனர்.

உணவை ருசித்த பெண்கள் கூறியதாவது:

குறைந்த விலை என்றாலும், சாப்பாடு நன்றாக உள்ளது. இது, நோயாளிகள், நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள், ஏழைகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

ஸ்டான்லி உள்ளிட்ட பிற அரசு மருத்துவமனைகளிலும், அம்மா உணவகத்தை திறக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள, அரசு மருத்துவமனைகளிலும் திறந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 


Page 310 of 3988