Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சாலை மேம்படுத்தும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

Print PDF

தினமலர்           21.11.2013

சாலை மேம்படுத்தும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

புதுச்சேரி:பெரம்பை ரோட்டில் இருந்து அரும்பார்த்தபுரம் வரையிலான பிரதான சாலையை மேம்படுத்தும் பணியை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சைவீரன்பட்டு பெரம்பை ரோட்டில் இருந்து அரும்பார்த்தபுரம் வரையிலான பிரதான சாலையை மேம்படுத்த, நகர மற்றும் கிராம அமைப்புத்துறை நிதியிலிருந்து 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் உட்புற வீதிகளில் தார் சாலை அமைக்க 43 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகள் துவக்குவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் அழகிரி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், செயற்பொறியாளர் குணசேகரன், உதவிப்பொறியாளர் கலியவரதன், இளநிலை பொறியாளர் சிவக்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் நகர் தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

டெங்கு தடுக்க மாநகராட்சி ஆலோசனை

Print PDF

தினமலர்         20.11.2013 

டெங்கு தடுக்க மாநகராட்சி ஆலோசனை

திருச்சி: மழை காலத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

மழைக்காலங்களில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை தடுக்க ஏதுவாக மாநகராட்சி நிர்வாகம், நல்வாழ்வு குறித்த சில விழிப்புணர்வு செய்திகளை பரப்பி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் குடிநீரை கொதிக்கவைத்து நன்கு வடிகட்டி ஆறவைத்து குடிக்க வேண்டும்.

வீட்டின் உள்ளேயும் வெளிப்புறத்திலும் தேங்காய் மூடிகள், டயர்கள், பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் டெங்கு கொசு உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியும்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க வேண்டும். குப்பைகளை, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை மழைநீர் வடிகாலிலோ அல்லது சாக்கடைகளிலோ தேங்காதவகையில் இருக்க உதவ வேண்டும்.

இது குறித்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே மாநகர மக்கள் இந்த அறிவுரைகளை ஏற்று நடந்து, மழை காலத்தில் ஏற்படும் நோய் தாக்கத்தை குறைத்து நலமுடன் வாழ கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சுகாதாரம் தொடர்பான புகார்களை 76395 33000, 76395 66000 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி கமிஷனர் பெருமிதம் கழிப்பிட பராமரிப்பில் திருச்சி முன்னோடி

Print PDF

தினமலர்         20.11.2013 

மாநகராட்சி கமிஷனர் பெருமிதம் கழிப்பிட பராமரிப்பில் திருச்சி முன்னோடி

திருச்சி: ""பொது கழிப்பிட பராமரிப்பில் திருச்சி முன்னோடியாக திகழ்கிறது,'' என, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறினார்.

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக கழிவறை தின நாள் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு மேயர் ஜெயா தலைமை வகித்தார்.

விழாவுக்கு முன்னிலை வகித்த மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி பேசியதாவது:

ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மாநகராட்சியில் 286 குடிசைப் பகுதிகள் உள்ளன. 4 ஆயிரத்து 643 இருக்கைகள் கொண்ட, 383 பொது கழிப்பிடங்கள் உள்ளன.

இவற்றில், கடந்த 2008ம் ஆண்டு முதல் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் அலைகள் மகளிர் குழு சார்பில் 67, ஸ்கோப் சார்பில் 28, சேவை சார்பில் 42, என மொத்தம் 137 பொது கழிப்பிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சமுதாயம் சார்ந்த கழிப்பிட பராமரிப்பில் திருச்சி மாநகராட்சி முன்னோடியாக உள்ளது.

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, 76 மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கழிப்பிட பயன்பாடு, பராமரிப்பின் அவசியம் குறித்த விழப்புணர்வு துண்டு பிரசுரங்கள், திறந்த வெளி கழிப்பிடங்களை புறக்கணித்தல் குறித்த போஸ்டர்கள் வழங்கப்பட்டு, பள்ளி துவங்கும் முன் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

கிராமாலயா நிறுவனர் தாமோதரன் பேசுகையில், ""மிக சுகாதாரமான நாடாக விளங்கும் சிங்கப்பூரில் தான் முதன்முதலாக 2001ம் ஆண்டு உலக கழிப்பறை தின அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு காலத்தில் திருச்சியில் இருந்து குஜராத், வார்தா போன்ற பகுதிகளுக்கு சென்று கழிப்பிட பராமரிப்பு, அமைத்தல் குறித்து பார்வையிட்டு திரும்பிய நிலை மாறி, தற்போது உலக அளவில் இருந்து திருச்சியில் உள்ள கழிப்பிட வசதிகளை பார்வையிடும் நிலை உருவாகியுள்ளது,'' என்றார்.

விழாவில், சிறப்பாக கழிப்பிடங்களை பராமரித்த கிராமாலயா அலைகள் குழுவை சேர்ந்த 12 குழுக்களுக்கு பரிசுகளை மேயர் ஜெயா வழங்கி, கிராமாலயா இணைதளத்தையும் துவக்கி வைத்தார்.

விழாவில், துணை மேயர் ஆசிக் மீரா மற்றும் கோட்டத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 311 of 3988