Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மதுரை அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் 3 வேளை உணவு மேயர் உறுதி

Print PDF

தினகரன்          20.11.2013

மதுரை அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் 3 வேளை உணவு மேயர் உறுதி

மதுரை, :  மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்கள் பயனடையும் வகையில் 3 வேளையும் உணவளிக்கும் விதமாக அம்மா உணவகம் விரைவில் திறக்கப்படும் என்று மேயர் ராஜன் செல்லப்பா கூறினார்.

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு எதிரே அம்மா உணவக கட்டிடப் பணி துவங்கியது. கடந்த ஓரிரு மாதங்கள் முன்பு திடீரென இப்பணி முடங்கியது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் மீண்டும் பணிகள் துவங்கியுள்ளது.

அம்மா உணவக கட்டிடப் பணியை நேற்று மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா ஆய்வு செய்தார். அவருடன் உதவி கமிஷனர் தேவதாஸ், அரசு மருத்துவமனை டீன் மோகன், நிலைய மருத்துவ அதிகாரி பிரகதீஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் உடன் சென்றனர். பின்பு மேயர் ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரையில் 11வது அம்மா உணவகம், அரசு மருத்துவமனையில் திறக்கப்படுகிறது. மேலும் சுந்தரராஜபுரம் மார்க்கெட், நெல்பேட்டை பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் விரைவில் திறக்கப்படும். மதுரை அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் நோயாளிகள், உறவினர்களுக்கு சோலார் மூலம் 24 மணி நேரமும் சூடான குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகாலையில் அவர்களுக்கு உகந்த உணவளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு முக்கியத்துவம் தரப்படும்.

எத்தனை பேருக்கு உணவு தயாரித்து வழங்கலாம் என்ற பட்டியல் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளை விட கூடுதல் சிறப்பு கவனிப்பில் இங்கு உணவு விநியோகம் நடக்கும்.

பிற இடங்களில் காலை, மதியம் மட்டுமே உணவு விற்பனை நடக்கிறது. அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் 3 வேளையும் உணவளிக்கும் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்படும். மருத்துவமனையில் தேவையான இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படும் என்றார்.

மேயர் ஆய்வு: மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் 2வது தளத்தில் உள்ள சுகாதாரப் பிரிவு, பொது நிர்வாகப் பிரிவு, பொறியாளர் பிரிவு மற்றும் 2ம் மண்டல அலுவலகம் ஆகியவற்றை நேற்று மேயர் ராஜன் செல்லப்பா ஆய்வு செய்தார். பொது நிர்வாக பிரிவில் உள்ள பழைய நாற்காலி, மேஜைகளை புதிதாக மாற்றும்படியும், மைய அலுவலகம் முழுவதும் வர்ணம் பூசும்படியும், பழைய இரும்பு பீரோக்களை மாற்றும்படியும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

பின்பு முதல்தளத்தில் உள்ள மைய நிர்வாக பிரிவு, மாமன்ற அலுவலக பிரிவுகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிந்து வருமாறும், அலுவலக கோப்புகளை பாதுகாப்பாக வைக்கும்படியும் உத்தரவிட்டார்.

 

385 இடங்களில் நம்ம டாய்லெட்

Print PDF

தினகரன்          20.11.2013

385 இடங்களில் நம்ம டாய்லெட்

தாம்பரம், : தமிழகத்தில் 385 இடங்களில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட உள்ளது என நகராட்சி நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கழிப்பறைகளில் தீவிர துப்புரவு பணி முகாம் நடந்தது. பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு பணியை நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே தொடங்கி வைத்தார். பின்னர் குரோம்பேட்டை பஸ் நிலையம், சி.எல்.சி. லைன், கோதண்டன் நகர் பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை ஆய்வு செய்தார்.

பின்னர், நிருபர்களி டம் அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தளங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலவசமாக பயன்படுத்தும் நம்ம டாய்லெட் 385 இடங்களில்  அமைக்கப்படவுள்ளன. இந்த பணி 4 மாதத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மண்டல நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தாம்பரம்- வேளச்சேரி சாலையில் நகராட்சி நிர்வாக உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தலைமையில் கழிப்பறை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்

Print PDF

தினகரன்          20.11.2013

மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்

சென்னை, : சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் துணை கலெக்டராக இருந்த லலிதா, சென்னை மாநகராட்சி துணை ஆணைய ராக (கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

 


Page 314 of 3988