Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பாரம்பரிய உணவு திருவிழா நகராட்சி தலைவர் சித்ரா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           20.11.2013

பாரம்பரிய உணவு திருவிழா நகராட்சி தலைவர் சித்ரா தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை நகரசபையின் சார்பில் மகளிர்களுக்கு ஸ்ரீ தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி செவிலியர் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சி மாணவிகளுக்கான பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

விழாவிற்கு தொண்டு நிறுவன நிர்வாகிகள் பெருமாள், அனிதா ஆகியோர் தலைமை தாங்கினர். நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) மணி முன்னிலை வகித்தார். சமுதாய அமைப்பாளர் சந்திரா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம் கலந்து கொண்டு பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த உணவு திருவிழாவில் பயிற்சி மாணவிகள் தயாரித்திருந்த 60 வகையான பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் நகரசபை மேலாளர்கீதா,நகரசபை உறுப்பினர்கள் கே.பி.சந்தோஷம், மணிகண்டன், மணிமேகலை, முன்னாள் உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம்

Print PDF

தினத்தந்தி           20.11.2013

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம்

கோபி பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவிகலெக்டர் சந்திரசேகரசாகமுரி மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், கோபி பஸ் நிலையத்தில் பூக்கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோபிசெட்டிபாளையம் உதவிகலெக்டர் சந்திரசேகரசாகமுரியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ள கடைகளை அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரி உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் நேற்று காலை கோபிசெட்டிபாளையம் பஸ்நிலையத்துக்கு சென்றனர். அங்கு, சிறிய பஸ் நிற்கும் பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த பூக்கடைகள், வெற்றிலைக் கடைகள், டீக்கடைகள் ஆகியவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி சிலர் ஆக்கிரமித்து இருந்த கடைகளை அவர்களாகவே அகற்றினார்கள்.

இடமாற்றம்

அகற்றப்படாத சிலகடைகள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டன. மேலும், சில கடைகளை கிரேன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு நகராட்சி லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. இதேபோல், பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் மற்றும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் ஆகியவை சிறிய பஸ்கள் நிற்கும் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

பஸ்நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை, நிற்கும் இடங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமித்து கடைகளை அமைக்கக் கூடாது. அவ்வாறு தடையை மீறி கடைகளை அமைத்தால் அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

குப்பையில்லாத திட்டத்துக்கு உதவிய 30 குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ் மேயர் செ.ம.வேலுசாமி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி           20.11.2013

குப்பையில்லாத திட்டத்துக்கு உதவிய 30 குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ் மேயர் செ.ம.வேலுசாமி வழங்கினார்

கோவை மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் ‘சூன்யா’ திட்டத்தை 23–வது வார்டில் கடந்த மாதம் 2–ந் தேதி மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார். அந்த வார்டு முழுவதும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரிக்க தனித்தனி பைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக பாஷ்யகாரலு மேற்கு, பொன்னுரங்கம் மேற்கு, வெங்கடசாமி மேற்கு, பெரியசாமி மேற்கு, திருவேங்கடசாமி மேற்கு ஆகிய 5 வீதிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

அப்போது முதல் குப்பைகள் தரம்பிரிக்கும் பணி பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் 4 டன் மறுசுழற்சி குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதற்காக கோவை மாநகராட்சி திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் மாநகராட்சி கமிஷனர் லதா ஆகியோர் சான்றிதழ் மற்றும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

மற்ற பகுதிகளிலும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களின் புகைப்படத்துடன் கூடிய தகவல் பலகை அந்தந்த தெருக்களில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்திபன், கே.ஆர்.ஜெயராமன், வார்டு கவுன்சிலர் மணிமேகலை மற்றும் கவுன்சிலர்கள் ரங்கராஜ், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 316 of 3988