தினமணி 21.12.2009
மளிகைக் கடைகளில் நகராôட்சி அலுவலர்கள் ஆய்வு
திருவாரூர், டிச. 20: திருவாரூர் நகராட்சி பகுதிகளில் உணவுப் பொருள்கள் கலப்படம் குறித்து நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு உணவுப் பொருள்கள் கலப்படத் தடுப்பு இணை இயக்குநரகத்தின் உத்தரவுக்கிணங்க, திருவாரூர் நகராட்சி ஆணையர் க. சரவணன், சுகாதார அலுவலர் எஸ். விஜயகுமார், உணவு ஆய்வாளர் க. மணாழகன், சுகாதார ஆய்வாளர்கள் வி. பழனிசாமி, ஆர். பாலமுருகன், வி. அருள்தாஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து, ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆணையர் க. சரவணன் கூறியது:
பொதுவாக மிளகாய் தூளில் செங்கல் தூள், சுதான் சாயம் போன்ற பொருள்கள் கலக்கப்படுகின்றன. இதனால், வயிற்று உபாதைகள் முதல் குடல் புற்று நோய்கள் வரை ஏற்படுகிறது. மல்லித் தூளைப் பொருத்தவரையில் பழைய கொத்துமல்லியில் ஒரு வித கந்தகம் பூசி புதிய சரக்கு போன்று மாற்றப்படுகிறது. இந்த மல்லியை கையில் எடுத்து நசுக்கினால் சாயம் கைகளில் ஒட்டிக் கொள்ளும். இதேபோல, மஞ்சள்தூளில் ஒருவகை சுண்ணாம்பு கலக்கப்படுகிறது. இதனால் ரத்தசோகை, குறை பிரசவம், கை, கால் வாதம், மூளை பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படும்.
இத்தகைய பொருள்களை உணவு கலப்படத் தடைச்சட்டத்தின் படி அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சில்லறையில் விற்பனை செய்யக் கூடாது. தற்போது எடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை கலப்படமானது என தெரியவந்தால் அந்த விற்பனை மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு மூன்று மாத சிறை தண்டனையும், ரூ.5,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என்றார் சரவணன்.