மேட்டூர் “சிட்கோ’ வளாக குடிநீர் இணைப்புகள்… துண்டிப்பு ரூ.61 லட்சம் சொத்துவரி நிலுவையால் அதிரடி
மேட்டூர்: மேட்டூர் சிட்கோ வளாகத்தில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள், 61 லட்சம் ரூபாய் சொத்துவரி நிலுவை வைத்துள்ளதால், மேட்டூர் நகராட்சி நிர்வாகம் சிட்கோ வளாகத்துக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்து, தற்காலிகமாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தி வைத்துள்ளது.ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதிக்குள் தங்கள் எல்லைக்குள் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளுக்கான சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை நகராட்சிகள், 100 சதவீதம் வசூலிக்க வேண்டும்.
மேட்டூர் நகராட்சிக்கு எல்லைக்குள் சிட்கோ தொழில் வளாகம் அமைந்துள்ளது.இதில், மெக்னீசியம் சல்பைட் உரம் தயாரிக்கும் ஆலைகள், பிளாஸ்டிக் பைப், காகிதம், அட்டை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட, 120 சிறு தொழிற்கூடங்கள் உள்ளது. ஆண்டுதோறும் சிட்கோ தொழிற்கூடங்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும்.கடந்த, 2008ல் மேட்டூர் நகராட்சி சிட்கோ தொழிற்கூடங்களுக்கு சொத்துவரியை, 150 சதவீதம் உயர்த்தியது. இதற்கு சிறுதொழிற்கூட அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சியை அணுகி வரியை குறைக்க கோரினர்.மேட்டூர் நகராட்சி, 2008ல் வரியை, 10 சதவீதம் குறைத்து விட்டு, மீண்டும் 2012ல் மீண்டும், 100 சதவீதம் வரி உயர்த்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுதொழில்கூட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சொத்துவரி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.வழக்கு நிலுவையில் இருந்ததால் தொழிற்கூட உரிமையாளர்கள் நகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் வைத்தனர். வரி நிலுவை, 2012-13ம் ஆண்டில் சொத்துவரி, 61.05 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. 61.05 லட்சம் ரூபாய் சொத்துவரி வசூல் ஆகாமல் நிலுவையில் இருந்ததால், அதை வசூலிக்க மேட்டூர் நகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.அதன்படி சில நாட்களுக்கு முன் சிட்கோ தொழிற்கூடங்களுக்கான குடிநீர் குழாயை மேட்டூர் நகராட்சி துண்டித்து, குடிநீர் வினியோகத்தை தற்காலியாக நிறுத்தி விட்டது.
நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், “”சொத்துவரி வசூலிக்க கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருந்தால் மட்டுமே, நகராட்சி வரி வசூலிக்க முடியாது. சிட்கோ வழக்கு நிலுவையில் தான் உள்ளது. சொத்துவரி வசூலிக்கும் அதிகாரம் நகராட்சிக்கு உண்டு. வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2008ம் ஆண்டு வரையிலான வரியை செலுத்தினாலே போதும், மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.