தினமணி 28.10.2010
“கன்னியாகுமரி தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ. 79 கோடி ஒதுக்கீடு’
நாகர்கோவில், அக்.27: கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த ரூ. 79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது என்று அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் தாணுமாலயம்புதூரில் ரூ. 13 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து அவர் மேலும் பேசியதாவது:
ஆரல்வாய்மொழி பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக பெருமாள்புரம், தேவசகாயம் மவுண்ட் ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
அடுத்த கட்டமாக ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதர பகுதிகளுக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் குடிநீர்த் திட்டப் பணிகளை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என்றார் அமைச்சர்.
பேரூராட்சித் தலைவர் பியூலா பாக்கியஜெயந்தி, ஹெலன்டேவிட்சன் எம்.பி.,
பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன், செயல்அலுவலர் அம்புரோஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.