தினமணி 21.09.2009
“புதைச் சாக்கடை இணைப்புக்கு பிளம்பரிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்’
தஞ்சாவூர், செப். 20: தஞ்சாவூர் நகராட்சியில் புதைச் சாக்கடை இணைப்பு பெற பிளம்பர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று நகராட்சி ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதைச் சாக்கடை இணைப்புக்கு நகராட்சியில் வைப்புத் தொகை ரூ. 5,000, விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, இணைப்புக் கட்டணம் ரூ. 500 மட்டுமே நகராட்சியில் செலுத்தினால் போதுமானது. பணம் செலுத்தியதும் நகராட்சியால் வேலை உத்தரவு வழங்கப்படும்.
வீட்டின் எல்லை வரை வீட்டின் உரிமையாளர்கள் தமது சொந்தப் பொறுப்பில் குழாய் அமைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், நகராட்சியல் விவரம் தெரிவித்தால் நகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு பிரதான குழாயுடன் இணைப்பு வழங்கப்படும்.
இப்பணிக்காக நகராட்சி மூலம் எந்த பிளம்பரையும் பணியமர்த்தவில்லை.
யாருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. எனவே, நகராட்சியின் அங்கீகாரம் பெற்ற பிளம்பர்கள் எனக்கூறி, யாரேனும் தொடர்பு கொண்டால் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.
இது தொடர்பாக விவரம் தேவைப்பட்டால் நகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
புதை சாக்கடை வீட்டு இணைப்பு வழங்கும் பணிக்கு அக்டோபர் 31-ம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வைப்புத் தொகை, இணைப்புக் கட்டணம் செலுத்தாதவர்கள் விரைவில் உரிய கட்டணம் செலுத்தி இணைப்பு பெற வேண்டும்.