தினமணி 25.09.2009
நிலவில் தண்ணீர் தடயங்களை “சந்திரயான்-1′ கண்டுபிடித்தது பெரும் சாதனை: மாதவன் நாயர்
பெங்களூர், செப். 24: நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை “சந்திரயான்-1′ செயற்கைக்கோள் கண்டுபிடித்திருப்பது மிகப்பெரும் சாதனையாகும்; எந்தநாட்டு செயற்கைக்கோள்களும் இதுபோன்ற ஆதாரங்களைத் திரட்டியதில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் ஜி.மாதவன் நாயர் தெரிவித்தார்.
நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்தியா தயாரித்து கடந்த ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவியது. நிலவின் மேற்பரப்பு, மலை முகடுகள், மண் போன்றவற்றை படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது.
இரண்டு ஆண்டுகள் நிலவை ஆராய அனுப்பப்பட்ட அந்த செயற்கோள்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு கடைசியில் கடந்த ஆகஸ்டில் புவிக்கட்டுப்பாட்டு மையத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழந்து முற்றிலும் செயல் இழந்தது.
நிர்ணயிக்கப்பட்ட காலம் முழுவதையும் பூர்த்தி செய்யாமல் சந்திரயான் செயல் இழந்தது ஒருபுறம் கவலையடையச் செய்தாலும் அது திட்டமிட்டபடி தனது பணிகளில் 95 சதவீதத்தை கன கட்சிதமாக செய்து முடித்தது; பல அரிய புகைப்படங்கள், தகவல்களை அனுப்பியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அந்த புகைப்படங்கள், தகவல்களை “நாசா‘ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை சந்திரயான் சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது:
இதுவரை நிலவை ஆராய்ந்த மற்றும் ஆராய்ந்து வரும் பிற நாடுகளின் செயற்கைக்கோள்கள், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் சந்திரயான் முதன்முதலாக நிலவில் தண்ணீர் இருப்பதற்கான உறுதியான தடயங்களை கண்டுபிடித்து அனுப்பிவைத்துள்ளது.
இது நிலவு தொடர்பான உலக நாடுகளின் ஆராய்ச்சியில் மிகப்பெரும் சாதனையாகும். நிலவு ஆராய்ச்சி வரலாற்றில் மைல்கல் ஆகும். சந்திரயான் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த நாசாவின் கனிம வளங்களை ஆராயும் முக்கிய கருவி நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தகவல்கள், தடயங்களை சேகரித்து அனுப்பியுள்ளது.
இவற்றை அமெரிக்காவில் உள்ள ஜெட் ஆய்வகத்திலும் ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி ஆய்வகத்திலும் ஆராய்ந்தபோது இது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்தும் சந்திரயான் அனுப்பிய முக்கிய தகவல்களையும் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு இஸ்ரோ அறிவிக்கும். நாசா விஞ்ஞானிகளும் அறிவிப்பார்கள் என்றார் மாதவன் நாயர்.