தினமலர் 11.01.2011
மின் மயானம் பராமரிப்பு பணி “ஈஷா’விடம் ஒப்படைக்க ஒப்புதல்
கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நஞ்சுண்டாபுரத்தில் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மின் மற்றும் எரிவாயு மயானத்தை பராமரிக்கும் பொறுப்பை “ஈஷா’பவுண்டேஷன் நிறுவனத்துக்கு வழங்க மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சி சார்பில் பாப்பநாயக்கன்பாளையம், சொக்கம்புதூர், ஆத்துப்பாலம் ஆகிய பகுதிகளில் மின் மற்றும் எரிவாயு மயானம் இயங்கி வருகிறது. இவற்றை தனியார் அறக்கட்டளையினர் பராமரித்து வருகின்றனர். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மின் மயானம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறதென்றும், மற்ற இரு மயானங்களும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் புகார் கூறி வருகின்றனர். இச்சூழலில் புதிதாக நஞ்சுண்டாபுரத்தில் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மின் மற்றும் எரிவாயு மயானத்தை வெள்ளிங்கிரி மலையடிவாரம் பூண்டிக்கு அருகே அமைந்துள்ள ஈஷா பவுண்டேஷன் அமைப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளவதற்கு அனுமதிப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எந்த கவுன்சிலரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆதரவு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினர். இதையடுத்து ஈஷா பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள, நகராட்சி நிர்வாக இயக்குனரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தின் அடிப்படையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டபின், ஈஷா அறக்கட்டளை நிறுவனம் மயானத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.