தினமலர் 21.07.2011
மழைநீர் சேகரிக்க தவறினால் குடிநீர் “கட்‘தமிழக அரசு அதிரடி
பெ.நா.பாளையம் : “கட்டட உரிமையாளர்கள் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த தவறினால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்‘ என, அனைத்து பேரூராட்சிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக அரசு அறிக்கையில் கூறியுள்ளதாவது: பேரூராட்சிகளின் பராமரிப்பில் உள்ள குளங்கள், கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி, நீர் ஆதாரங்களை தூர் வாரி, நிலத்தடி நீர் சேமிப்பு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை ஏற்படுத்த, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பேரூராட்சி கட்டடங்களில், மழைநீர் சேகரிப்புகளை புனரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். உபயோகமற்ற ஆழ்குழாய் கிணறுகள், பொது திறந்த வெளிக்கிணறுகளில் தனியார் பங்களிப்புடன், மழைநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.கட்டட அனுமதி கோரும் வரைபடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என்பதை உறுதி செய்த பின், செயல் அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தியதை உறுதி செய்த பின், வரி விதிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத, கட்டட உரிமையாளரின் செலவில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதை மேற்கொள்ளாதபோது, பேரூராட்சிகள் வாயிலாக மழைநீர் சேகரிப்புகள் ஏற்படுத்தி, செலவை, சொத்து வரி வசூலிப்பதை போல, உரிமையாளர்களிடம் வசூலிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் ஏற்படுத்த தவறும் பட்சத்தில், கட்டடத்திற்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு ள்ளதை, உறுதி செய்து, உரிய சான்றிதழ் பெற்று, அனுப்புமாறு அனைத்து மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.