தினமலர் 06.08.2012
“மெகா சிட்டி’ இரண்டாம் கட்ட பணிக்கு தயாராகுது மாநகராட்சி :கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி கிடைக்கும்
சென்னை : சென்னை விரிவாக்கப் பகுதிகளை மேம்படுத்தும் வகையில், பெருநகர வளர்ச்சித் திட்டத்தின்படி (மெகா சிட்டி), இரண்டாம் கட்ட பணிக்கு மாநகராட்சி தயாராகி வருகிறது. மாநகராட்சிக்கு, இந்த ஆண்டு கூடுதல் நிதி கிடைக்கும் என தெரிகிறது.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட எட்டு மண்டலங்களிலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், “சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம்’ (மெகா சிட்டி) ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விரிவாக்க பகுதிகளில், சாலை, மழை நீர் கால்வாய், தெரு விளக்கு, நடை பாதை, பஸ் நிழற்குடைகள், வழி காட்டும் பெயர் பலகைகள் அனைத்தும், ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ளவும் மாநகராட்சிக்கு வலியுறுத்தியது. கூடுதல் நிதி கடந்த ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், மாநில அரசு, 500 கோடி ரூபாயை ஒதுக்கியது.இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கும், 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அரசாணை சென்னைக் குடி நீர் வாரியம், திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருவதால், கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்த தொகையை விட, குறைவானதே போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை மாநகராட்சிக்கு, இத்திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டிற்கு, கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “”மெகா சிட்டி திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி கிடைக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே, மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில், ஒருங்கிணைந்த பணிகளை துவக்கியுள்ளது. அதன் இணைப்பாக, இரண்டாம் கட்ட பணிக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு, தாமதமின்றி பணிகளை துவக்க மாநகராட்சி தயாராகி வருகிறது,” என்றார்.