தினமணி 25.08.2012
“மாநகராட்சி மூலம் லாரிகளில் விநியோகிக்கும் குடிநீருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்’
தூத்துக்குடி, ஆக. 24: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீருக்கு யாரும் பணம் செலுத்த வேண்டாமென மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியோடு இணைக்கப்பட்ட மீளவிட்டான், சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய இடங்களுக்கு மாநகராட்சி மூலம் லாரிகளில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
ஆனால், சிலர் லாரியில் மக்கள் தண்ணீர் பிடிக்கும்போது ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் என பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மாநகராட்சியோடு இணைந்துள்ள பகுதிகளுக்கு மாநகராட்சியில் இருந்து கட்டாயம் குடிநீர் வழங்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அப்படியிருக்கையில், குடிநீருக்காக யாரும் கட்டணம் கேட்டால் மக்கள் கொடுக்க வேண்டாம்.
மாநகராட்சிதான் லாரிகளுக்கு கட்டணம் செலுத்தி மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்குகிறது. இதில் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை.
கட்டணம் கேட்பவர்கள் குறித்த தகவலை மாநகராட்சிக்கு பொதுமக்கள் 0461-2326902 அல்லது 2326901 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
ஐந்து ஊராட்சிப் பகுதிகளுக்கும் குடிநீர் லாரி எந்தெந்த நாள்களில் வரும் என்கிற அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் மாநகராட்சி இணையதளம் அல்லது மாநகராட்சி அலுவலகம், ராஜாஜிபூங்கா நீர்த்தேக்க நிலையத்தில் மக்கள் தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.