தினமலர் 05.09.2012
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: வாங்கினால் இனி “அபராதம்’
மதுரை:மதுரையில் விற்பனை செய்த பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.மாநகராட்சியில், 40 மைக்ரானுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. “மீறுவோர் மீது, அபராதம் விதிக்கப்படும்,’ என, அதிகாரிகள் எச்சரித்தனர். அதை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்தி வருகின்றனர். நகர்நல அலுவலர் பிரியா தலைமையில் அதிகாரிகள், தெற்குமாசி வீதியில் “ரெய்டு’ நடத்திய போது, 30 கடைகளில், தடை செய்யப்பட்ட “பிளாஸ்டிக்’ பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது மட்டுமின்றி, இனி பயன்படுத்துவோர் மீதும் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியா கூறியதாவது:
பிளாஸ்டிக் விற்பது மட்டுமின்றி, பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீதியில் வருவோரும், கண்காணிக்கப்படுவர். ரூ.100அபராதம் விதிக்கப்படும், என்றார்.