தினமணி 08.01.2010
கிராமப் பெண்களின் எழுத்தறிவு “கற்கும் பாரதம்‘ திட்டம்: தமிழகத்துக்கு ரூ.125 கோடி
சென்னை, ஜன. 7: கிராமப்புறப் பெண்களின் எழுத்தறிவை மேம்படுத்தும் திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.125 கோடி நிதி அனுமதி வழங்கியுள்ளது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மத்திய அரசின் கற்கும் பாரதம் (சக்ஷார் பாரத்) திட்டம் குறித்து மாநில எழுத்தறிவு முனையத்தின் அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு அனைத்து கிராமப்புறப் பெண்களும், கல்வியறிவைப் பெறும் வகையில் கற்கும் பாரதம் (சக்ஷார் பாரத்) என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இத்திட்டத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவான எழுத்தறிவு உள்ள கிராமப்புறப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும். 15 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு இத்திட்டத்தில் கற்பிக்கப்படும்.
365 மாவட்டங்கள்…: நாட்டில் சுமார் 365 மாவட்டங்கள் 50 சதவீதத்திற்கும் குறைவாக எழுத்தறிவு உள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7 மாவட்டங்கள் உள்ளன.
அடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். இதற்கு மத்திய அரசு ரூ.125 கோடி நிதியை, தமிழக அரசுக்கு ஒதுக்கியுள்ளது.
முதற்கட்டமாக 5 மாவட்டங்கள்…: இதில் முதற்கட்டமாக சேலம், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.