சொத்து வரி நீண்டநாள் நிலுவை: திருமண மண்டபத்துக்கு “சீல்’
குடியாத்தம் நகராட்சிக்கு சொத்துவரியை நீண்ட நாள்களாகச் செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாகச் செலுத்த வலியுறுத்தி ஜப்தி நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், புதுப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் சொத்து வரி ரூ. 1.70,850 செலுத்தப்படவில்லையாம்.
இதுதொடர்பாக பலமுறை கேட்டும் நிலுவைத் தொகையைச் செலுத்தாததால் நகராட்சி ஆணையர் ஜி. உமாமகேஸ்வரி தலைமையில் சென்ற, நகராட்சி மேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வியாழக்கிழமை மண்டபத்தை பூட்டி “சீல்’ வைத்தனர்.
ஜப்தி, சீல் வைப்பு நடவடிக்கைகள் தொடரும்!
பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், தொழில்வரி, கடை வாடகை ஆகியவற்றை உடனடியாகச் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆணையர் உமாமகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தவறும்பட்சத்தில் ஜப்தி, சீல் வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.