“ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிவசூல் மையங்கள் செயல்படும்’
மார்ச் இறுதி வரை மாநகராட்சி வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்று, ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட நிலுவை மற்றும் கேட்பு வரிகளைச் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் தினமும் மாலை 5 மணி வரை செயல்படுகின்றன.
மார்ச் இறுதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி வரிவசூல் மையங்கள் செயல்படும். வரிவசூல் பணியைத் தீவிரப்படுத்தும் பொருட்டு சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் நிலுவை வைத்துள்ள கட்டட உரிமையாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு குடிநீர் துண்டிப்பு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனே செலுத்த வேண்டும்.