“குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை’
கிருஷ்ணகிரி நகரில் முறைகேடாக மின் மோட்டர்கள் மூலம் குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
கிருஷ்ணகிரி நகரில் உள்ள பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், நகரப் பகுதியில் தற்போது பிரதான குடிநீர் குழாய்களில் இருந்தும், நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு செல்லும் குழாய்களில் இருந்தும் சிலர் முறைகேடாக இணைப்பு எடுத்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு முறையாகக் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, முறைகேடாக மின் மோட்டர்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவதைத் தவிர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி மூலம் ஆய்வு செய்து இணைப்பு துண்டிப்பதுடன், மின் மோட்டாரும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தற்போது நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் சுண்டேகுப்பம் மற்றும் கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பிரதான மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளன.
எனவே, பழுது நீக்கும் வரை வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் கே.ஆர்.சி.தங்கமுத்து.