தினமணி 18.11.2009
“காமராஜரின் மதிய உணவுத் திட்டமே தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம்’
சென்னை
தாம்பரம், நவ. 17: கடந்த 1957 ம் ஆண்டில் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமே தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்று மாநில திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் கூறினார்.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் பாரத் நிர்மான் கருத்தொளி இயக்கம் துவக்க விழாவில் செவ்வாய்கிழமை கலந்து கொண்டு, மேலும் அவர் பேசியது: இந்தியாவில் 72 சதவிகித மக்கள் கிராமங்களிலும்,28 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களிலும் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 57 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களிலும்,43 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களிலும் வசித்து வருகிறார்கள்.
யுனெஸ்கோ புள்ளி விவரப்படி, சீனாவில் 98 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 70 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆனால் பின்தங்கிய மாநிலங்களான ஒரிசா, பிகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆரம்பக் கல்வி மிகவும் பின்தங்கியுள்ளதால், தீவிரவாதம், வன்முறை, பயங்கரவாதம் போன்றவை பெருகியுள்ளன. இந்த சமயத்தில் நாம் பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய மதிய உணவுத்திட்டத்தின் பெருமையை எண்ணிப்பார்க்க வேண்டும்.
மத்திய அரசு சமீபத்தில் தான், கடந்த 2004ல் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக அறிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் தீட்டும் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு மக்களைச் சென்றடைந்தால் தான் ஒட்டு மொத்த வளர்ச்சியை நாம் எட்ட முடியும் என்றார் மு. நாகநாதன்.
பத்திரிகைத் தகவல் அலுவலக உதவி இயக்குனர் எம்.தெரஸ்நாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே.மிஸ்ரா,பத்திரிகைத் தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் கே.எம். ரவீந்திரன்,ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஏ. மனோகரன்,ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் டி. சம்பந்தம்,குன்றத்தூர் பேருராட்சித் தலைவர் கே. சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.