“கட்டடங்களுக்கு முறையான அனுமதி அவசியம்’
தூத்துக்குடியில் கட்டுமானங்களுக்கு முறையான அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடியில் பல்வேறு கட்டுமானங்கள் உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நகர் ஊரமைப்புச் சட்டம் 1971, பிரிவு 56 மற்றும் 57-ன் படி பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனுமதியற்ற அபிவிருத்திகளைக் கட்டுப்படுத்துவதும், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுத்து நிறுத்துவதும் உள்ளூர் திட்டக்குழுமத்தின் நோக்கம்.
எனவே, நகர் ஊரமைப்பு ஆணையரால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒப்புதல் பெறுவதற்கான சரிபார்ப்பு படிவத்தில் அனைத்து விவரங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வரும் உள்ளூர் திட்டக்குழுமம் விரைந்து நடவடிக்கை எடுத்து விதிகளுக்கு உள்பட்டு திட்ட அனுமதி வழங்க தயாராக உள்ளது.
பல கட்டட உரிமையாளர்கள் திட்ட அனுமதி பெறுவதைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிச்சையாக அனுமதியின்றி கட்டடம் கட்டி வருகிறார்கள்.
இவ்வாறு அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் கட்டடங்களால் வாகன நிறுத்தும் இடம் பாதிப்பு, காற்றோட்டம், வெளிச்சம் போன்ற பாதிப்புகள், தீ விபத்து காலங்களில் ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் உடைமை சேதம் போன்ற பாதிப்புகள், அபிவிருத்தி கட்டணம் மற்றும் அடிப்படை வசதி கட்டணம் போன்ற அரசுக்கு வருவாய் இழப்பு பாதிப்புகள், கலப்பு அபிவிருத்திகளால் அமைதியான வாழ்க்கை முறை பாதிப்பு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அனுமதி பெறாத கட்டடங்கள் மீது பூட்டி சீல் இடுதல், இடித்தல், இடித்ததற்கான தொகையை வசூலித்தல், கட்டுமான பொருள்கள், கருவிகள், கட்டுமான இயந்திரங்கள், உபகரணங்கள், சார பொருள்கள், வாகனங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் இதர பொருள்கள், அனுமதியற்ற கட்டுமான இடத்தில் உள்ள பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தல், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை ஏலத்தில் விட்டு வரும் தொகையை அரசு கணக்கில் சேர்த்துக் கொள்ளுதல், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறான பொது பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் கட்ட உத்தேசித்து வரும், கட்டப்பட்டு வரும் அனைத்து வகையான கட்டுமானத்துக்கும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நகர் ஊரமைப்புத் துறையின்கீழ் செயல்படும் உள்ளுர் திட்டக்குழுமத்திற்கு விண்ணப்பித்து திட்ட அனுமதி பெற்றுக் கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.