“ஆக்கிரமிப்பு நிலம்: தகவல் தெரிவிக்கலாம்’
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சி. சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வரின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளை மீட்பதற்கும், அவற்றை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திரும்பப் பெற்று அரசிடம் ஒப்படைக்கவும் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், இந்து சமய அறநிலையத் துறை, வக்பு வாரியம் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஏதேனும் தங்களது பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் அது குறித்து ஆட்சியரிடம் நேரிலோ, கடிதம் மூலமாகவோ தங்களிடமுள்ள உரிய விவரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தெரியப்படுத்தலாம். இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.