தினமணி 21.11.2009
புதுச்சேரியில் நடக்கும் “குப்பை அரசியல்‘
புதுச்சேரி ரெங்கப்பிள்ளை வீதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை வியாழக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஜேசிபி.
புதுச்சேரி, நவ. 20: புதுச்சேரியில் குப்பை கொட்டுவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அரசியல் பின்னணிதான்.
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் நாள்தோறும் சுமார் 400 டன் அளவுக்கு குப்பை உருவாகிறது. புதுச்சேரியில் குப்பையைச் சேகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ள அரசு அதை கையாள்வதற்கு சரியான திட் டம் தீட்டவும் அதை அமல்படுத்தவும் தவறி விட்டது. நாள்தோறும் உருவாகும் குப்பைகள் கருவடிக்குப்பம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மலைபோன்று குவிக்கப்பட்டு வந்தன. இப்போது குறிப்பிட்ட பகுதிகளில் குப்பை கொட்டக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புகள் மக்களிடம் இருந்து வந்தாலும் பின்னணியில் எந்த வகையிலாவது அரசியல்வாதிகள் இருக்கின்
றனர் என்பதுதான் உண்மை.
குறிப்பிட்ட வார்டு கவுன்சிலர், குறிப்பிட்ட தொகுதி எம்.எல்.ஏ., மேலும் ஒரு சில அமைச்சர்கள் கூட மறைமுகமாக குப்பை கொட்டும் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பிட்ட பகுதி மக்களின் கோரிக்கையைத் தீர்த்து வைக்க வேண்டியது இதுபோன்ற அரசியல்வாதிகளுக்குப் பொறுப்பும் கடமையையும் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் மக்களிடம் பிராந்திய உணர்வு, குறிப்பிட்ட பகுதி உணர்வைத் தூண்டிவிட்டு போராட் டத்துக்கு வழிகோலுவது தேவையற்றது. அதற்குப் பதிலாக ஒவ்வொரு வார்டுகளிலும் உருவாகும் குப்பைகளை அதே பகுதியில் அதைக் கையாள்வது எப்படி என்பதை இவர்கள் யோசிக்கலாம். மேலும் அதுபோன்ற குப்பை மேலாண்மை திட்டத்துக்கு மக்களைத் தயார் செய்யலாம். புதுச்சேரிக்கு அருகில் உள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சியில் குப்பை மேலாண்மை திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து இந்த பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட் கூறுகையில், மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்தெடுக்கப்படுகிறது. மேலும் ரூ.36 லட்சம் செலவில் உரக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பைகள் மக்க வைக்கப்படுகிறது இந்த உரத்திலிருந்து மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. இந்த உரத்தை விற்பனை செய்கிறது இந்தப் பேரூராட்சி.
எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத் துவதில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பதாக புதுச்சேரி அரசு கூறி வந்தாலும் மக்களின் பொது சுகாதார வசதியான குப்பை மேலாண்மை திட்டத்தில் “கோட்டை விட்டுவிட்டது‘. குப்பை மேலாண்மையை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு நகராட்சி பஞ்சாயத்துகளின் கடமை. புதுச்சேரியில்தான் குப்பை மேலாண்மையை பெரும் பிரச்னையாக மாற்றி இதில் நேரடியாக அரசே தலையிட வேண்டிய நிலை வந்துள்ளது.
குருமாப்பேட்டை பகுதியில் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் உருவாகும் குப்பைகள் இங்கு கொண்டு வந்து சேர்த்து உரமாக மாற்ற 4 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இதற்காக 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.49.6 கோடி செலவில் பெரிய திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறினால்தான் குப்பை கொட்டும் பிரச்னைக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும்.
இதைத் தவிர மேட்டுப்பாளையம் பகுதியில் இப்போது லாரிகள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பை சேகரிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்தவும் முதல் முதலில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்தத் திட்டம் மாற்றப்பட்டு முழுவதும் அப்பகுதியில் லாரிகள் நிறுத்தும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள 38 ஏக்கர் பரப்பளவில் 18 ஏக்கர் பரப்பளவு குப்பை கொட்டுவதற்காக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. என்ன காரணத்துக்காக இத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரியவில்லை. மேலும் இந்த லாரிகள் நிறுத்தும் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்காக சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்பட்டு அதற்கு ஏற்கெனவே அனுமதியும் பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பகுதியில் இடம் நிறைவேற்றவில்லை.