தினமணி 11.07.2013
தினமணி 11.07.2013
அரசு பொது மருத்துவமனையில் “அம்மா’ உணவகம் 15 நாள்களில் திறக்கப்படும்: மாநகராட்சி அதிகாரிகள்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்
அமைக்கப்பட்டு வரும் “அம்மா’ உணவகம் 15 நாள்களில் திறக்கப்படும் என்று
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மலிவு விலை “அம்மா’
உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி, பொங்கல், எலுமிச்சை
சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை
வழங்கப்படுகின்றன. மேலும் மாலை வேளையில் சப்பாத்தி வழங்குவதற்கான
ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் பயன்பெறும்
வகையில், மருத்துவமனைகளில் “அம்மா’ உணவகம் தொடங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டது. இதன்படி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 15
நாள்களில் உணவகம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: “அம்மா’ உணவகங்களுக்கு
பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி அரசு
பொது மருத்துவமனையில் உணவகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனையடுத்து “அம்மா’ உணவகம் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டது.
கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், இன்னும் 15 நாள்களில் உணவகம் திறக்கப்படும்.
மேலும் சென்னையில் உள்ள ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம்,
குழந்தைகள் மற்றும் தாய், சேய் நல மருத்துவமனைகளில் “அம்மா’ உணவகங்கள்
திறக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்னும் ஒரு மாத காலத்துக்குள்
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் “அம்மா’ உணவகங்கள் திறக்கப்பட்டுவிடும்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.