“தூய்மை பாரத இயக்கத்தில் வீடுகள்தோறும் சுகாதாரம் குறித்து கணக்கெடுக்கப்படும்’
திருவாரூர் மாவட்டத்தில் வீடுகள்தோறும் தூய்மை பாரத இயக்கத்தில் சுகாதாரம் குறித்த கணக்கெடுப்புப் பணி நடத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இதுதொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசுத் திட்டமான முழு சுகாதார இயக்கம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் மத்திய அரசால் நிர்மல் பாரத் அபியான் (தூய்மை பாரத இயக்கம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் குடும்பவாரியான சுகாதாரம் குறித்த கணக்கெடுப்புப் பணி மாவட்டத்தில் 430 ஊராட்சிகளிலும் தொடங்கவுள்ளது. இப்பணியில் ஊராட்சிச் செயலர்கள் வீடு வீடாகச் சென்று ஏப்.20-ம் தேதிக்குள் பணியை முடிக்க வேண்டும்.
கணக்கெடுப்புப் பணியை கண்காணிக்க மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு பணி மேற்பார்வையாளர், வட்டத்துக்கு ஒரு மண்டல அலுவலர் நியமிக்கப்படவுள்ளனர். மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
தனிநபர் கழிவறை, பள்ளிக் கல்வித் துறை, அங்கன்வாடி கழிவறைகள், மகளிர் சுகாதார வளாகம், ஆண்கள் சுகாதார வளாகம் ஆகியவைற்றை ஊராட்சிகள் சுத்தமாக வைத்துக் கொண்டால் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். சாமுவேல் இன்பதுரை உள்ளிட் டோர் பங்கேற்றனர்.