தினமணி 17.04.2013
“சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்து தணிக்கை’
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் சென்னையில் மழை நீர் சேகரிப்பு குறித்து தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசுகையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் வளர்ச்சி விதிமுறையில் ஒவ்வொரு கட்டடத்துக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு முறையை வலுவாக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்படும்.
பரந்த குடியிருப்புகளில் மக்களின் பொழுதுபோக்கு வசதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திறந்தவெளி இடங்களில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆலோசனையுடன் விளையாட்டு உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நில உபயோகத் தகவல்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும்.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆய்வு மேற்கொள்ளும்.
வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை 63 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் வெளிவட்டச் சாலையின் கிழக்குப் பகுதியில் எதிர்காலப் போக்குவரத்து வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 மீட்டர் நிலப்பகுதியின் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் வைத்திலிங்கம்.