தினமணி 05.01.2010
சாலை மேம்பாடு: “திட்ட வரைவு‘ விரைவில் தயாரிக்க முடிவு
திருச்சி, ஜன. 4: திருச்சி மாநகர சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கான திட்ட வரைவை விரைவில் தயாரிக்க, திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ், திருச்சி மாநகரில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன. தமிழக அரசின் புதுமையான திட்டமாக புதை சாக்கடைப் பணிகள் முடிவடைந்த மாநகராட்சிகளில் ரூ. 1,000 கோடியில் மேற்கொள்ளப்படும் இந்த ஒட்டுமொத்த தொகுப்புத் திட்டத்துக்காக சாலைகளைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சாலைகளைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயர் எஸ். சுஜாதா தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோட்டத் தலைவர்கள் எஸ். பாலமுருகன், ரெ. அறிவுடைநம்பி, ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ், த. குமரேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெ. ஸ்ரீராமன், து. தங்கராஜ் (இந்திய கம்யூ.), க. தங்கராஜ் (மார்க்சிஸ்ட்), அ. ஜோசப் ஜெரால்டு (தேமுதிக), டி. ராமமூர்த்தி (மதிமுக), வி. ஜவஹர் (காங்.) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகரிலுள்ள முக்கிய சாலைகள் அனைத்தையும் இத்திட்டத்தில் சேர்க்கவும், எந்தப் பகுதியும் விடுபடாமல் மாமன்ற உறுப்பினர்களைக் கலந்து பேசி சாலைகளைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கலந்தறிதற்குரியர் மூலம் திட்ட வரைவை விரைவில் தயார் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.