“கோவை மாநகராட்சிப் பகுதியில் நாய் வளர்க்க உரிமம் பெற வேண்டும்’
கோவை மாநகராட்சியில் நாய் வளர்ப்போர் இனி உரிமம் பெற்றாக வேண்டும்.
கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசியது:
சாமி (திமுக): மாநகராட்சி எல்லைப் பகுதியில் பலர் பன்றி வளர்க்கின்றனர். இப்பன்றிகள் மாநகராட்சிப் பகுதிக்குள் வந்து செல்கின்றன. இதைத் தடுக்க வேண்டும்.
மாநகராட்சி சுகாதார அலுவலர் சுமதி: மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் நாய் மற்றும் பன்றிகளைப் பிடித்து ஓரிடத்தில் வளர்க்கலாம்.
சாமி (திமுக): சாக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் அடைத்துக் கொள்வதால் தண்ணீர் பல இடங்களில் தேங்குகிறது. மழைக் காலம் துவங்கும் முன் தூர் வார வேண்டும்.
மேயர் செ.ம. வேலுசாமி: மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எனத் தனியாக பணியை நடத்தலாம். கல்வெர்ட்டுகளில் பிளாஸ்டிக் அடைத்துக் கொள்வதால் மழை நீர் தேங்குகிறது. பன்றிகளையும் நாய்களையும் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க தனியாக ஒரு கூட்டம் நடத்தலாம். நாய்களுக்குத் தனியாக உரிமம் வழங்கலாம். இதன் மூலம் தெரு நாய்களைத் தனியாக அடையாளம் காண முடியும்.
ராமமூர்த்தி (சி.பி.எம்.): மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க யாரும் முன் வருவதில்லை. ஏற்கெனவே பழுதாகியுள்ள ஆழ்குழாய்க்கிணறைப் பழுது நீக்கவும் யாரும் வருவதில்லை. குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க கூடுதல் தொகை தருவதில்லை என்று கூறப்படுகிறது.
மேயர் செ.ம. வேலுசாமி: ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப் பணம் கொடுப்பதில் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.
கிழக்கு மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம்: கிழக்கு மண்டலப் பகுதியில் தெருவிளக்குகள் பராமரிக்கப்படுவதில்லை. இதற்கு போதுமான வாகனங்கள் இல்லை.
துணை ஆணையர் சு.சிவராசு: தெருவிளக்குப் பராமரிப்புத் தொடர்பான பல்வேறு புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 2 வாகனங்கள் மட்டும் உள்ளன. கூடுதலாக ஒரு வாகனம் வாங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சிப் பகுதியில் புதிதாக பிளம்பர்களுக்கு உரிமம் வழங்கும் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.