“குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை’
வேட்டவலம் பேரூராட்சியில் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார்.
கோடைக் காலத்தை கருத்தில் கொண்டு, பேரூராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யும் கிணறு தூர் வாரப்பட்டுள்ளது. வேட்டவலம் அரண்மனைத் தெருவில் உள்ள 2000 லிட்டர் கொள்ளளவு மினி பவர் பம்பு, 4000 லிட்டராக மாற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பேரூராட்சிப் பகுதியில் உள்ள 71 கைப்பம்புகள் மற்றும் 88 மினி பவர் பம்புகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீர் ஆதாரம் குறைந்துள்ள கைப்பம்பு மற்றும் மினி பவர் பம்புகளை தூர் வாரி குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கணேசன் தெரிவித்துள்ளார்.